சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியை அடுத்து சம்மாந்துறை பொலிஸார் அதிரடிச் சுற்றிவளைப்பு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில், மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றைச் சம்மாந்துறைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸாரால் இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இதன் போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டியமை ஒரே மோட்டார் சைக்கிளில் 3 முதல் 4 பேர் வரை பயணித்தமை பிரதான வீதியை மறித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

காணொளியால் சிக்கிய கும்பல்

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய குறித்த காணொளியில், சம்மாந்துறைப் பகுதியில் சில இளைஞர்கள் எவ்வித வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாது, தலைக்கவசம் அணியாமல் ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் அமர்ந்து பயணித்துள்ளனர்.

அத்துடன், ஏனைய வாகனங்கள் செல்லும் பிரதான வீதியை மறித்து, ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.

இக்காணொளியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப் பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு தீவிரம்

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரதீப் குமார பொறுப்பேற்றதன் பின்னர், பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குமான தொடர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் வழிகாட்டல்

இவ்விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையானது, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி மேற்பார்வையில், போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விஜயவர்தன, குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமீர உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :