மெகொட கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த பொருளாதார நெருக்கடியில் வாழும் பெண்ணொருவரின் வீட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
குறித்த பெண்ணின் அவலநிலையை எடுத்துரைத்து, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை மீளப் பெற்றுக்கொள்ள உதவுமாறு சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாத் மொஹிதீன், ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, மனிதாபிமான அடிப்படையில் உடனடி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஹாஷிம் உமர் பௌண்டேசனின் பொதுச்செயலாளர் ஏ.எம். ஜௌபர், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவியை சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாத் மொஹிதீனிடம் கையளித்தார்.
பின்னர், அந்த நிதித்தொகை குறித்த பெண்ணிடம் சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாத் மொஹிதீன் மூலம் கையளிக்கப்பட்டது. இந்த நிதியுதவியின் மூலம், துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை மீளப் பெற்றுக்கொண்டு, குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசரத் தேவைகளை உணர்ந்து, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து வரும் ஹாஷிம் உமர் பௌண்டேசன், இத்தகைய உதவிகளின் மூலம் மேலும் பல குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மனிதாபிமான உதவிக்கு பயனாளி பெண்ணும் அவரது குடும்பத்தினரும் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர், பொதுச்செயலாளர் ஏ.எம். ஜௌபர் மற்றும் உதவிக்காக முன்வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாத் மொஹிதீன் ஆகியோருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment