இவ்விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்கைத்துறையின் பேராசிரியரும், Child First English College-இன் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 21 ஆண்டுகளாக முன் பாடசாலை கல்வித் துறையில் சிறப்பான சேவையாற்றி வரும் Child First English College, குழந்தைகளின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழித் திறன், Elocution (வாக்காற்றல்), ஆளுமை மேம்பாடு, நற்பண்புகள், மார்க்கத்தையும் மனிதர்களையும் நேசிக்கும் பண்புகள் என்பவற்றை மையமாகக் கொண்டு கல்வி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, இங்கு கல்வி பயிலும் பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலும், இணைச் செயற்பாடுகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இவ்விழாவில் கௌரவ விருந்தினர்களாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ. கென்னடி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவத்துறை பேராசிரியருமான பேராசிரியர் பாரதி கென்னடி, சம்மாந்துறை கல்வி வலய அலுவலகத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் எச். நைரூஸ்கான்
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும், மருத்துவர்கள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் அடங்கிய பெற்றோர் குழுவினரும் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். இவர்களில் ஓய்வுபெற்ற பதிவுசெய்யப்பட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் ஐ.எல். உவைசுல் வாரி, மருத்துவ அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணி எம்.எம். நப்சார் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றிய பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து கௌரவ அதிதிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அன்புடன் வரவேற்றார்.
பாடசாலை 21 ஆண்டுகளை நிறைவு செய்து 22வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு வெள்ள அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட விழா 2025 ஜனவரியில் நடைபெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு டிசம்பரில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பாடசாலையில் சுமார் 82 மாணவர்கள் இணைந்துள்ளதாகவும், மாணவர் எண்ணிக்கையை விட விழுமியக் கல்வியே முக்கியம் எனவும் வலியுறுத்தினார். குழந்தைகளின் ஒழுக்கம், பண்பாடு, சமூக நடத்தை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மத மற்றும் மனிதநேய விழுமியங்கள் மீது பாடசாலை விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பீச் கிளீனிங், மரநடுகை, கல்வி மற்றும் விளையாட்டு பயணங்கள், தேசிய மற்றும் சர்வதேச தினக் கொண்டாட்டங்கள் போன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப வயதிலேயே மொழி கற்றல் முக்கியம் என ஆய்வுகள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, குழந்தைகளுக்கு தேவையற்ற கல்விச் சுமைகளை திணிக்க வேண்டாம் என பெற்றோர்களிடம் அவர் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் உரையாற்றிய பேராசிரியர் பாரதி கென்னடி, குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகப் பொறுப்புணர்வை விதைப்பதே எதிர்கால சமூக மாற்றத்தின் அடித்தளம் என வலியுறுத்தினார்.
அனர்த்த காலங்களில் உதவுதல், சுற்றுச் சூழலை சுத்தப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் வெறும் Corporate Social Responsibility அல்ல, Responsible Social Responsibility ஆக அமைய வேண்டும் என்றும், இதில் குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
‘Red Car Theory’ என்ற கருத்தை எடுத்துரைத்த அவர், வாழ்க்கையில் இலக்கை அடைய கவனம், முயற்சி மற்றும் செயல்பாடு அவசியம் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மேலும், இன்றைய டிஜிட்டல் சூழலில் குழந்தைகளை முழுமையாக தொழில்நுட்பத்திலிருந்து பிரிப்பது சாத்தியமல்ல; ஆனால், அதை சரியான வழியில் பயன்படுத்தக் கற்றுத்தருவது சமூகத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் UKG மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்வு (Batch of Child – 2025), பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாணவர் திறன் வெளிப்பாடுகள் மற்றும் நினைவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறுவர், சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சமூக விழிப்புணர்வும் வளர்க்கப்பட்டிருப்பது எதிர்கால சமூகத்திற்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்தது.
குழந்தைகளின் கல்வி மட்டுமல்லாது, மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு கல்வி நிறுவனமாக Child First English College தொடர்ந்து பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment