மாத்தளை மீஸான் ஹாஜியாரின் நூற்றாண்டு நினைவு: வாழ்க்கை, சமூகப் பணி மற்றும் அரசியல் பங்களிப்புகளை நினைவுகூரும் நூல் வெளியீடு



அஷ்ரப் ஏ சமத்-
லங்கையின் புகழ்பெற்ற வணிக முன்னோடி, தனவந்தர் மற்றும் சமூகப் பணியாளரான மாத்தளை மீஸான் ஹாஜியாரின் வாழ்க்கை வரலாறு, அவர் ஆற்றிய சமூக மற்றும் அரசியல் பணிகளைப் பதிவு செய்யும் சுயசரிதை நூல், அவரது 100வது வயது நினைவை ஒட்டி கடந்த 13.12.2025 அன்று பி.எம்.ஜி.சி.எச் அரங்கில் வெளியீட்டு விழாவாக நடைபெற்றது.

மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் சமூக, கல்வி, மத மற்றும் அரசியல் தளங்களில் அவர் ஆற்றிய அரிய பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. விழாவில் மீஸான் ஹாஜியாரின் 16 பிள்ளைகள், பேரர்கள், பூட்டர்கள், அரசியல்வாதிகள், மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த குருமார்கள், குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதான உரையை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நிகழ்த்தினார். முன்னாள் நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உடரட்ட அமரபுர நிக்காய அனுநாயக்க கோனாகலை தேரர், டாக்டர் ரஞ்சித் ரியா ஆகியோர் உரையாற்றினர்.அதனைத் தொடர்ந்து மீஸான் ஹாஜியாரின் பேரர்களான இஜாஸ் மீஸான், சப்ராஸ் மீஸான், சபீர் சக்கி ஆகியோரும் உரையாற்றி, தங்கள் தாத்தாவின் மனிதநேயமும் சமூகப் பற்றுதலும் குறித்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.

மேலும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார அலுவிகார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்று நூல் வெளியீட்டை சிறப்பித்தனர்.

மீஸான் ஹாஜியார் முன்னாள் பிரதமர்கள் டி.எஸ். சேனாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச உள்ளிட்டோர், முன்னாள் அமைச்சர்கள் பதியுதீன் மஹ்மூத், சேர் ராசிக் பரீட், ஏ.சி.எஸ். ஹமீத், டாக்டர் கலீல் ஆகிய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தார். மாத்தளையில் காலம் சென்ற முன்னாள் அமைச்சர் அலுக் அலுவிகாரையை ஐ.தே.கட்சியுடன் இணைத்து அரசியல்வாதியாக உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும், முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத்தின் அரசியல் உயர்விற்கும் காரணகர்த்தாவாக விளங்கியதாகவும் உரையாளர்கள் குறிப்பிட்டனர்.

கண்டி, மாத்தளை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அரசியல்வாதிகள் முன்னெடுத்த சமூக நலச் சேவைகளுக்கு அவர் தனது சொந்த நிதியில் இருந்து தாராளமாக உதவியதோடு, பாதைகள் அமைத்தல், பள்ளிவாசல்கள், கோவில்கள், பௌத்த விகாரைகள், வீடமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

மீஸான் ஹாஜியாரின் மனிதநேயச் சேவைகளும் சமூக ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பும் எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழும் என உரையாளர்கள் வலியுறுத்தினர். அவரது நூற்றாண்டு நினைவு நிகழ்வும் சுயசரிதை நூல் வெளியீடும், அவர் விட்டுச் சென்ற சேவை மரபை மீண்டும் நினைவூட்டும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :