பாகிஸ்தான் பிரதம மந்திரியின் மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் நாட்டிலிருந்து மேலும் 200 டன் நிவாரணப் பொருட்கள் நேற்று முன்தினம் (15) கடல் மார்க்கமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
கடந்த வாரத்தில் இலங்கையின் பல பகுதிகளை தாக்கிய கடும் வெள்ளம், சூறாவளி மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்கும் நோக்கில், இந்த நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அசீஸ் அவர்கள் இந்த நிவாரணப் பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார். அதனைத் தொடர்ந்து, அவை இலங்கை துறைமுக அபிவிருத்தி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிவாரணத் தொகுதியில் அத்தியாவசிய மருந்துகள், பால் மா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள், கூடாரங்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், படுக்கை விரிப்புகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் மின்சாரம் இல்லாத முகாம்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய விளக்குகள் உள்ளிட்ட பல அவசியப் பொருட்கள் அடங்கியுள்ளன.
இதற்கு முன்னதாக, கடந்த 13ஆம் திகதி, பாகிஸ்தான் அரசாங்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 13 மெட்ரிக் தொன் எடையுள்ள உணவுப் பொருட்களையும் இலங்கைக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மனிதாபிமான அணுகுமுறையை இந்த உதவித் தொகுதிகள் வெளிப்படுத்துகின்றன.
.jpeg)
0 comments :
Post a Comment