நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உயர்கல்வியின் ஊடாக பங்களிப்பதே மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நோக்கம்!



மர்லின் மரிக்கார்-
ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புனானையில் அமைந்துள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிகளை உயர்கல்வி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் வாரம் இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில் அல்லது மார்ச் மாத முற்பகுதியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் இப்பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வே அடுத்த வாரம் இடம்பெறவிருப்பதாக இப்பல்கலைக்கழகத்தின் தலைவரான பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களுக்கு கற்கை நெறிகளை அறிமுகம் செய்யும் இந்நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தின் பீடங்களையும் அவற்றின் உத்தியோகத்தர்களையும் கல்வியியல் ஆலோசகர்களையும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு ​பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்பல்கலைக்கழகத்தின் வசதிகளை அவர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மத்தியில் புதுமுக அறிமுகமும் கற்கை நெறி அறிமுகத்தின் போது கிடைக்கப்பெறும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர இப்பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கல்விசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தாம் விரும்பிய கற்கை நெறிகளை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ளலாம். சகல வசதிகளையும் உள்ளடக்கி 10 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் செயற்படத் தொடங்கும் ​போது இலங்கையிலுள்ள மிகப் பெரிய தனியார் பல்கலைக்கழகமாக இது விளங்கும் என்றும் குறிப்பிடுகிறார் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்.

தற்போது இப்பல்கலைக்கழகம் நவீன வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்புக்களை கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாக இங்கு மூன்று விசாலமான விரிவுரை மண்டபங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 200 மாணவர்களை உள்ளடக்கக்கூடியனவாக அமைந்துள்ளதோடு 80 மாணவர்களை உள்ளடக்கக்கூடிய 14 விரிவுரை மண்டபங்களும் அடங்கியுள்ளன. 08 ஆய்வுகூடங்களைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம் வளர்ச்சியடைந்த நாடுகளின் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள நவீன வசதிகளுடனான நூலகத்தையும் கொண்டிருக்கிறது. கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கென தங்குமிட 150 அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தங்கும் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

மட்டக்களப்பு பல்கலைக்கழகமென ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த இப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய பெயரே ‘விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச பல்கலைக்கழக’மாகும்.

இப்பல்லைக்கழகம் தொடர்பில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான பிரசாரத்தினால் சுமார் 4 வருடங்கள் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் பொறுப்பில் இருந்தது. அக்காலப்பகுதியில் கொவிட் 19 தொற்று சிகிச்சை நிலையமாகவும் இப்பல்கலைக்கழகக் கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனாலும் இப்பல்கலைக்கழகக் கட்டடங்கள் பயன்படுத்தப்படாது மூடப்பட்டு கிடப்பது தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தலைவராக முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் அடிப்படையில் அவரிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வரைபடக்கலை, சட்டம், சுற்றுலா மற்றும் வர்த்தக முகாமைத்துவம், வள முகாமைத்துவம், விவசாய தொழில்நுட்பம் கலாசாரம் மற்றும் மொழிகள் ஆகிய பீடங்கள் அடங்கலாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய உலகளாவிய ரீதியில் வளர்ச்சிபெற்றுவரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான கற்கை நெறிகளும் இப்பல்லைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிடுகிறார் கலாநிதி ஹிஸ்புல்லாஹ். உள்நாட்டு வெளிநாட்டு தொழிற்சந்தைக்கு ஏற்ப செய்முறைப் பயிற்சியுடன் இங்கு கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படும்.

வெளிநாடுகளில் அதிக செலவுடன் கற்கக்கூடிய கற்கை நெறிகளை இங்கு சாதாரண கட்டணத்தில் உள்நாட்டு மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கும் உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நிதியமொன்று அமைக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்ட முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உயர்கல்வியின் ஊடாக பங்களிப்பதே இப்பல்கலைக்கழகத்தின் பிரதான நோக்கம் என்றுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :