வெளிநாட்டு தூதுவர்களின் மலையகம் தொடர்பான புதிய அக்கறை எமது முயற்சிகளின் பலாபலன்- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி



மெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐநா, உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பலநாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேச உள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும் போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும். இதில் தவறில்லை. இருந்தால், அராங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே யாரும் இனவாதிகள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும். எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளாக மாற்ற நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்து வரும் நாட்களில் நாடு அறிந்து கொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறி வைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும் மற்றும் யூஎஸ்எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம். “இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும் பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.
இன்று அரசு முன்னெடுக்கவுள்ள “அஸ்வெசும-ஆறுதல்” என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது. “அஸ்வெசும-ஆறுதல்” திட்டம் தொடர்பாக, உலக வங்கியுடனான எமது அடுத்த கட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக, நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம். எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :