மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் - பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு



க.கிஷாந்தன்-
" மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11.02.2023) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச சபை தவிசாளர்கள், உட்பட கட்சி பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

மேற்படி சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் கூறியவை வருமாறு,

" இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும், இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருக்கின்றது. அந்தவகையில் இலங்கைக்கு வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சு நடத்தினோம்.

இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் நாடாக உதவிய இந்தியாவுக்கு காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்தோம்.

அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினோம். இதன்போது மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுபாலமாக செயற்படுவேன் என அண்ணாமலை குறிப்பிட்டார். " - என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :