இந்த நிலைமையினை ஓரளவுக்கேனும் போக்க அரசியல் ரீதியாக ஒன்றுபடுவது மிக முக்கியமானது. இன்றைய இந்த சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் தங்களுடைய நில புலங்களையும் தங்களது இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள அரசியல் ரீதியாக ஓரணியில் அணிதிரள்வது காலத்தின் கட்டாயமாகும். குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து தான் சார்ந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க கைகோர்த்தாக வேண்டிய கடப்பாடும் இப்போதைய மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு கடமையாகின்றது.
எனவேதான் இன்றைய இந்த தேர்தல் கால சூழ்நிலைகளில் சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது பழைய பகைமைகளை மறந்து மக்களுக்காக மக்களின் நலனுக்காக பயணிக்க வேண்டிய கட்டாய தருணத்தில் இருக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒரே குடையின் கீழ் பயணிக்க வேண்டிய காலம் இப்போது கனிந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் நேற்றைய தினம் தனது தாய் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பயணிக்க முன் வந்திருக்கிறார். இந்த இணைவு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு பல்வேறு அணுகூலங்களை கொண்டு வரலாம்.
அதேபோன்று மற்றுமொரு மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமையான முன்னாள் அமைச்சர் எம் எஸ் எஸ் அமீர் அலி அவர்களும் தனது தாய் கட்சியோடு இணைந்து பயணிக்க முன்வருவாரேயானால் இது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதாக அமையும்.
ஏனெனில் ஏற்கனவே காத்தாங்குடி ஏறாவூர் ஆகிய அரசியல் தலைமைகள் ஒரே கட்சியில் பயணிக்கும் போது கல்குடா தொகுதியில் உள்ள எம் எஸ் எஸ் அமீர் அலி அவர்களும் இணைந்து பயணிக்க முன்வருவாரேயானால் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் ஒரே கட்சிக்குச் செல்லும் அவ்வாறு செல்லும்போது இரண்டு முஸ்லிம் ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் இது நிச்சயமாக கல்குடா தொகுதி முஸ்லிம்களுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக அமையும் இதனால் கல்குடாவின் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படும்.
இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாத போது கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது.
எனவே கனிந்திருக்கின்ற இந்த காலம் தங்களுடைய அந்திம காலத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தங்களுடைய பகைமையை தீர்த்துக் கொள்வதற்கும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவுவதற்கும் ஏற்ற காலமாகும். எனவே இந்த காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் எம் எஸ் எஸ் அமீரலி அவர்கள் தனது தாய் கட்சியில் இணைந்து கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதோடு மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வழி சமைக்க வருகை தர வேண்டும் .
(எஸ்.ஐ.முஹாஜிரின்,ஆசிரியர்,
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்,
ஓட்டமாவடி.)
0 comments :
Post a Comment