மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது.
ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு 'வலி சுமந்த கதையாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது.
மேற்படி கொலனியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 260 இற்கு அதிகமான மக்கள் தினந்தோறும் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதுடன், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாக வாரத்துக்கு ஒரு முறையே சிறிய நீர் தாங்கியில் நீர் நிரப்பி வழங்கப்படுகின்றது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
"நீர் வளம் மிக்க மலையகத்தில் எமக்கு நீர் குடிநீர் கிடைக்காமை வேதனையளிக்கின்றது. நீரை பெறுவதிலேயே பாதி நாள் போய்விடுகின்றது. எப்படிதான் நாம் வாழ்வது..." என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், நீர்வழங்கல் அமைச்சை பொறுப்பேற்றுள்ள ஜீவன் தொண்டமான், எமது குறையை தீர்ப்பார் என நம்புகின்றோம். எமக்கான குடிநீர் திட்டத்தை வழங்குமாறு உரிமையுடன் ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
0 comments :
Post a Comment