ஆசைகளைச்சுருக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள்..!சுஐப் எம்.காசிம்-

"நாட்பட்டுப்னோல் எதுவும் நாற்றமெடுக்கும் என்பார்கள்", முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அறிமுகம் செய்த அரசியலமைப்புக்கும் இந்த நிலைமைதான் நெருங்குகிறதோ தெரியாது. நாற்பது வருடங்களையும் கடந்துள்ள இவரது அரசியலமைப்பு 20 தடவைகள் திருத்தப்பட்டு, இப்போது 21ஆவது திருத்தத்துக்கு தயாராகிறது. அதிகாரத்தின் உச்ச எல்லையில் ஒருவரைக் கொண்டு வைக்கிறது இதிலுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை. சட்டமியற்றும் அதிகாரமுள்ள பாராளுமன்றத்துக்குக்கூட கட்டுப்படாதளவுக்கு ஜனாதிபதியை சுதந்திர புருஷராக்கியுள்ளதும் இந்த அதிகாரமே. அதிகார மோதல், நிர்வாக இழுபறி, குடும்பச் செல்வாக்கு, சொத்துக் குவிப்பு இன்னும் எத்தனையோ ஏற்பாடுகளுக்கு வழிவிட்ட இவ்வதிகாரம், இன்று மக்களது எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. கடைசியாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் இந்த அதிகாரம்தான் காரணமெனக் கூறப்படுவதால், இதை ஒழிக்குமாறு ஆர்ப்பாட்டங்கள் தலையெடுத்துள்ளன.

இதிலுள்ள புதுமை என்னவெனில், இந்த அதிகாரத்திலிருப்பவரின் மனநிலையிருந்துதான் இதன் ஆழ, அகலங்கள் அறியப்படுகின்றன. ஏற்கனவே இருந்தவர்கள் சிலரிடமிருந்து சிறுபான்மை சமூகங்கள் சிலதைப் பெற்றிருக்கின்றன. இதனால், இந்த அதிகாரத்தை ஒழிப்பதா? இல்லையா? என்பதில் இச்சமூகங்களின் தலைவர்களிடையே தடுமாற்றம் இருக்கிறது. அமைச்சரவை, பாராளுமன்றம், வாக்கெடுப்பு என்றில்லாமல், ஜனாதிபதியுடனுள்ள நெருக்கத்தை வைத்து சிறுபான்மை தலைவர்கள் சிலர் ஏற்கனவே தங்கள் சமூகங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொண்டனர். மலையக மக்களுக்கான வாக்குரிமை, பாராளுமன்ற பிரவேசத்துக்கான வெட்டுப்புள்ளியை ஐந்தாக குறைத்தமை, தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான இலங்கை, இந்திய உடன்படிக்கை இன்னும் தமிழை அரசமொழியாக்கியமை எல்லாம் நிறைவேற்று அதிகாரத்தால் சிறுபான்மையினர் அடைந்த ஆதாயங்கள்தான்.

இவ்வாறு இலகுவாகப் பெறுவதை இல்லாமல் செய்வதா? என்ற தடுமாற்றம் சிறுபான்மையினருக்கு இருப்பதை நியாயப்படுத்தும் சாதனைகள்தான் இவை. இப்பதவிக்கு வருபவர், எதையும் பொருட்படுத்தாது நடந்து கொண்டால்தான், இந்த அதிகாரத்தில் சிறுபான்மையினருக்கு ஆத்திரம் வருகிறது. ஆனால், இப்போது சிலருக்கு வந்துள்ள ஆத்திரம் எங்கிருந்து வந்தது? இவ்விளைஞர்கள் எதனை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்?என்ற சந்தேகங்கள்தான் நிலைமைகளை இழுபறியாக்கின்றன. உண்மையில், பொதுமக்கள் இவ்விடயத்தில் ஒரே மனநிலையிலே உள்ளனர். ஆனால், அரசியல்வாதிகள் குறிப்பாக இந்த கதிரையில் அமரும் ஆசை எவருக்கும் இல்லாமலா விடும்? அமர்வதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளவர்கள்தான் இது ஒழிக்கப்படக் கூடாதென்று விரும்புகின்றனர். தடுமாறும் அல்லது அடிக்கடி நிலைமாறும் இவர்களது அறிக்கைகளிலிருந்து இதை ஊகிக்க முடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, அரசியலுக்குள் முடிச்சுப்போட முடியும் சில சக்திகள், திறமையான நிர்வாகத்தால் எதையும் நிவர்த்திக்கலாம் என்கின்றன. அதிகாரத்திலல்ல குறைபாடு, நிர்வாகத்திலேயே எனக்காட்ட முனைவதும் ஒருவகை அரசியல்தானே!

இதனால்தான், சிலர், 21ஆவது திருத்தத்தில் நிறைவேற்றதிகாரம் குறிவைக்கப்படுவதை விடவும், இரட்டைப்பிரஜாவுரிமையை இல்லாமல் செய்வதில் குறியாக உள்ளனர். ஊழல்வாதிகள் தப்பிச்செல்வதற்கு இடமளிக்கும் வகையில், இந்த இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதாதகச் சொல்லப்படுவதுதான் இதற்கான பிரதானம். தனியொரு குடும்பத்தை ஆளும் வர்க்கமாக்குமளவுக்கு இந்த நிறைவேற்றதிகாரம் பாவிக்கப்பட்டதா? அல்லது இதை பயன்படுத்திய விதங்களில் தவறு ஏற்பட்டதா? என்ற கருப்பொருளிலே இன்று அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைப்பதும் தற்செயலான ஆசைகளில் ஒன்றுதான். இந்த அதிகாரத்தை அடையத் துடிப்பவர்களுக்கு இப்படியென்றால், அதிகாரத்தை அனுபவிப்பவருக்கு எப்படியிருக்கும்? இதை அனுபவித்த எவரும் இடையில் இதை விட்டுக்கொடுக்காததும் இதற்குத்தானே!

நல்லாட்சியில் சற்று மட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட இடைவௌிகள் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட பலவீனங்கள் பற்றி இன்றும் பேசப்படுகிறதே! மட்டுமா? இருபத்தைந்து வீதமாகவுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு, நேரடியாக ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்யும் அல்லது தீர்மானிக்கும் வாய்ப்பை ஒழிப்பது அறிவுக்கு ஒப்பானதா? என்றெல்லாம் பல கருத்துக்கள் களத்தை கனதியாக்கவே செய்கிறது.

இதுகுறித்து அண்மையில் கருத்து வௌியிட்ட முஸ்லிம் சிறுபான்மை தலைமையொன்று, நிறைவேற்றதிகார ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் வழிகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதன் மறுவடிவம் என்ன வகையிலும் இவ்வதிகாரமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. நம்பிக்கையிழந்தால் அவரை அனுப்பும் வழிகள் இலகுவாக இருக்குமிடத்து, எப்படியும் பொறுப்பின்றி இவர் செயற்படமாட்டார் என்ற மறுபதமும் இதிலுள்ளது. அனுப்பும் வழிகள் எல்லா வகையிலும் கடினமாக இருக்கையில், ஐந்தாண்டுகளுக்கு அசைக்க முடியாதென்ற ஆணவம் ஏற்படாமலா இருக்கும்.? எனவே, அனுப்பும் வழிகள் இலகுவாக்கப்படுவது சிறிய கடிவாளம் இடுவதற்கு ஒப்பானதாக இருக்கலாம்.

இவற்றையெல்லாம் விட இளைஞர்களின் மாற்றத்துக்கான பாதையும், பயணமும் தௌிவாக இருப்பதை அவதானிக்கையில், அதிகாரத்துக்கு ஆசைபடும் எவரும் ஆத்திரமடையாமல் இருக்கப்போவதில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :