ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் அந்த நாடு உருக்குலைந்தது. அதுபோல் ஐரோப்பிய நாடுகள் யுத்தத்தினால் முற்றாக அழிந்து தரைமட்டமானதுடன் அங்கு மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளும் இருக்கவில்லை. அத்துடன் அங்கு உணவு இல்லை. அதனால் பசி, பட்டினி மக்களை வாட்டியது. உணவுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை அங்கு ஏற்பட்டது.
ஆனால் இன்று யுத்தமும் இல்லை, நாடு உருக்குலையவுமில்லை. பார்வைக்கு செழிப்பாகவும், அமைதியாகவும், பணக்கார நாடு போன்று காட்சி தருகின்ற எமது நாட்டில் பால்மா இல்லை, எரிபொருட்கள் இல்லை, மக்களின் நாளாந்த வருமானம் அதிகரிக்கவில்லை ஆனால் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது.
அவ்வாறு விலை உயர்ந்த பொருட்களை நினைத்த நேரத்தில் கொள்வனவு செய்ய முடியாது. நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கவேண்டிய நிலை. அதாவது இரண்டாவது உலக யுத்தத்துக்கு பின்பு ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் எதனை எதிர்கொண்டதோ அதனையே நாங்கள் தற்போது எதிர்கொள்கிறோம்.
நீண்ட காலமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தும் ஈரான், வட கொரியா போன்ற நாடுகளில் எமது நாட்டில் இன்று நிலவுகின்ற வறுமை, உணவு தட்டுப்பாடுகள் போன்ற நிலைமை அங்கு காணப்படவில்லை. அத்துடன் உலகில் வறுமைக்கு பெயர்போன வங்காளதேஸ் மற்றும் ஆபிரிக்க நாடுகளிடம் நாங்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தனைக்கும் முப்பது வருடங்களுக்கு மேலாக எமது நாட்டில் கொடூரமான உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. நாட்டின் பொருளாதார மையங்களும், எரிபொருள் சுத்திகரிப்பு நிலைகள், களஞ்சியசாலைகள் போன்றவற்றின் மீது விடுதலை புலிகள் குண்டுத்தாக்குதல் நடாத்தியதுடன், நாட்டின் சில பகுதிகள் சுடுகாடாக காட்சியளித்தது. அவ்வாறான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில்கூட இன்று ஏற்பட்டது போன்ற நிலைமை மக்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆட்சியாளர்களின் பொக்கட்டுக்களை நிரப்பும் நோக்கில் தூரநோக்கற்ற அபிவிருத்தி மாயை மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதற்காக ஏராளமான பணம் அதிக வட்டிக்கு பெறப்பட்டது.
அவ்வாறு சீனா போன்ற நாடுகளிடமிருந்து காலத்திற்குக் காலம் தொடர்ந்து பெறப்பட்ட பெருந்தொகை பணத்தில் அர்த்தமற்ற அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர, நாட்டுக்கு வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்காக அந்த பணங்கள் பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அதிக வட்டிக்கு பெறப்பட்ட பணம் முழுவதும் அபிவிருத்திக்காக செலவழிக்கப்படவில்லை. மாறாக அபிவிருத்தி என்ற போர்வையில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினர்களும் ஆளையாள் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்தனர்.
அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட அல்லது களவெடுக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு அல்லது பதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆட்சியாளர்கள் தங்கள் மீதுள்ள ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களை மறைப்பதற்காக அல்லது ஆட்சியை தொடர்ந்து தக்கவைப்பதற்காக சிங்கள மக்களின் கவனத்தினை திசை திருப்பும் நோக்கில் அவ்வப்போது முஸ்லிம் விரோத உணர்வுகளை உருவாக்கி சிங்கள பெரும்பான்மை மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக கொதிநிலையில் வைத்திருந்தனர்.
ஆனால் அவைகள் அனைத்தும் தற்போது செல்லாக்காசானதுடன், நாடு முழுவதிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் அமைச்சர்கள் இராஜினாமா என்னும் நாடகத்தை அரங்கேற்றியதுடன், எதிர்த்தரப்பினரை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
ஆட்சி மாற்றம் ஏற்படுவதனால் மட்டும் நாட்டில் திடீர் மாற்றங்கள் அல்லது அதிக முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை. அத்துடன் தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ளும் சக்தி எமது நாட்டுக்கு இல்லை.
இன்றைய நிலைமையை தடுப்பதென்றால் கடந்த வருடத்துக்கு முன்பு தூரநோக்கில் திட்டமிட்டு செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வெள்ளம் தலைக்கு மேலால் சென்றுவிட்டது.
இதற்கு அவசர தீர்வு காண்பதென்றால் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் போன்றோர்கள் ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்து அல்லது களவெடுத்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள அல்லது பதுக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தினை பறிமுதல் செய்து நாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதுதான் இன்று அவசரமாகவும் முதன்முதலாகவும் செய்ய வேண்டிய பரிகாரமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment