இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை சிறப்புற வாழ்த்துவதோடு, இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த சாந்தி, சமாதானம், செளபாக்கியம் நிலவிட வாழ்த்துவதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளரும், மத்திய கொழும்பு அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பைஸர் முஸ்தபா, தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எமது நாடு சுதந்திரம் அடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே, தமது பங்களிப்புக்களைச் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு விடுதலை அடைந்து, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக்கொண்டது. இதனைப் பெற்றுக்கொடுப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இன்று நாம் நினைவு கூர வேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்.
அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரும் பாடுபட்டு உழைத்த எம் தேசிய வீரர்களின் பங்களிப்புக்களை நன்றியுணர்வுடன் நினைவு கூரும் நேரமாக இன்றைய நாளை நாம் கருத வேண்டும். அத்துடன், எங்கள் தாயகத்தை மீட்டெடுத்த தங்களுடைய உயிர்களையே அர்ப்பணித்துத் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செய்வதற்கான நேரமாகவும் இன்றைய நாளை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாம் அன்று பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும்.
இதற்கு இன, மத, கட்சி, நிற பேதங்களையும் தாண்டி, "ஒரே நாட்டு மக்கள்" என்றவாறு அபிமானத்துடன், ஒற்றுமையாகவும் அமைதியாகவும் செயற்படுவது, இன்றைய கால கட்டத்தில் நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
சுதந்திர இலங்கையின் பிரஜையாக இருப்பதை, நாம் அனைவரும் பெருமையாகக் கொள்வதைப் போல், எமது இலங்கைத் தாய் நாட்டையும் நாம் அனைவரும் நேசிக்க வேண்டும்.
நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை, அதனைப் பெற்றுக்கொடுத்தவர்கள் கண்ட கனவை நனவாக்க வேண்டும். இதற்கு நாம் பாடுபட வேண்டும்.
கண்ணியம், ஆன்மீக சுதந்திரம் உருவாகுவதன் மூலமே சுதந்திரம் பூரணத்துவம் அடைகின்றது. எனவே, சுதந்திரத்தை பூரணத்துவமாக்க அர்த்தமுள்ளதாக்க, அனைவரும் இணைந்து இத்தருணத்தில் செயற்படுவோம்.
எமது நாட்டில் மிகுந்த செழிப்பும், சந்தோஷமும், ஒற்றுமையுடனும் கூடிய "சமாதான வாழ்வு" என்ற இலக்கை, இலங்கை வாழ் மக்கள் அடையும் வரை, நாம் தொடர்ந்து பாடுபடுவோம், ஒத்துழைப்போம், உறுதியாக இருப்போம்.
0 comments :
Post a Comment