கா.குடி நகரசபை தவிசாளரினால் பெற முயற்சிக்கப்படும் 200 மில்லியன் கடன் தொடர்பில் இன்று NFGG அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தவிசாளர் அவர்களுக்கு!
*நீங்கள் பெற முயற்சிக்கும் 200 மில்லியன் வங்கிக் கடன் தொடர்பாக..*
மேற்படி விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வுகளின் போது எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மிகத்தெளிவாகவும் விரிவாகவும் தெரிவித்திருந்தோம்.
மேற்படி 200 மில்லியன்( 20 கோடி) கடனானது, நகர சபையின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் டெலிகொம் வீதியில் நகரசபைக்குச் சொந்தமான பழைய மடுவம் அமைந்திருந்த காணியில் நவீன கடைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகளை செய்வதற்கு பெறப்படுவதாக தங்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், இக்கடைத்தொகுதியினை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு 2000 மில்லியன் (200கோடி) ரூபா அளவில் தேவைப்படும் என்றும் கூறப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் கருத்துக்களை நாம் முன் வைத்திருந்தோம்.
1. 200 மில்லியன் ரூபாய் தொகை வங்கியிலிருந்து 10 வருட கடனாக பெறப்படும்போது மாதமொன்றுக்கு வட்டியாக மாத்திரம் 15 இலட்சம் அளவில் செலுத்த வேண்டிவரும். முதல் தொகையோடு சேர்த்து மொத்தமாக மாதாந்தம் 30-35 லட்சரூபாய் அளவில் செலுத்த வேண்டி ஏற்படும்.*( வருடமொன்றுக்கு 3-4 கோடி ரூபாய்).*
எனவே, நகரசபை மீதான பாரதூரமான நிதிச்சுமையாக இது அமையும்.
2. கடைத்தொகுதியை மொத்தமாக பூர்த்தி செய்வதற்கு 2000 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் 200 மில்லியன் ரூபாய் கடனை பெறுவதன் மூலம் 10 வீதம் அளவிலான மிகக்குறைந்த அளவு வேலைகளையே பூர்த்தி செய்ய முடியும். இந்நிலையில், இப்பாரிய முதலீட்டுக்கான எந்தவித வருமானத்தினையும் இத்திட்டத்திலிருந்து எதிர்பார்க்க முடியாது.
3. ஆர்வமுள்ள வர்த்தகர்களிடமிருந்து கடைகளுக்கான முற்பணத் தொகையினை பெற்று அந்த நிதியிலிருந்து மிகுதி வேலைகளை பூர்த்தி செய்ய முடியும் என்ற ஒரு யோசனையினையும் கூறினீர்கள். தற்போதுள்ள பொருளாதார-வியாபார வீழ்ச்சி நிலமைகளுக்கு மத்தியில் பாரிய தொகைகளை கடைகளுக்கான முன்பணமாக செலுத்த எவரும் முன் வருவார்கள்
என எதிர்பார்ப்பதும் எதார்த்தத்திற்கு முரணானதாகும்.
ஆக, கடனாக பெறப்படும் 200 மில்லியன் தொகைக்குரிய வட்டித் தொகையானது அவசியமற்ற செலவாகவும் நிதிச்சுமையாகவுமே மாறுகின்ற அபாயம் இங்கு உள்ளது.
4. கடந்த 2009ம் ஆண்டின் போது இதுபோல் வட்டிக்கு கணிசமான ஒரு கடன் தொகை நகர சபையினால் பெறப்பட்டது. *அது பற்றிய அபாயத்தினை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தோம்.* அதனையும் புறக்கணித்து முன்னாள் தவிசாளர் *முபீன்* அவர்களினால் பெறப்பட்ட அந்தக் கடனானது மக்களுக்கு எந்தப்பிரயோசனமும் அளிக்கவில்லை என்பதோடு அதற்குரிய வட்டியும் முதலுமாக சேர்த்து கடந்த பத்து வருடங்களாக பாரிய தொகைகளை மாதாமாதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவரை *மொத்தமாக124 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஒரு ரூபாய் கூட மக்களுக்கு பிரயோசனம் அளிக்கவில்லை.* இதனை நல்லதொரு பாடமாக எடுக்காது மேலும் மேலும் வட்டி கடன் சுமைகளுக்குள் நகரசபையினை தள்ளிவிடுவது பொருத்தமானதல்ல.
அத்தோடு, இப்பாரிய திட்டம் தொடர்பில் துறை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட சாத்தியப்பாட்டு அறிக்கைகளோ அல்லது நம்பிக்கை தரும் வியாபார திட்டங்களோ சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நாங்கள் இதுபற்றி பலமுறை நினைவுபடுத்தியும் இருக்கிறோம்.
மேலும், கடந்த நகரசபை அமர்வில் வழங்கப்பட்ட அறிக்கைகளின் படி கடந்த 2021 ஆண்டுக்கான நகர சபையின் சொந்த வருமானமாக 79 மில்லியன் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கடந்த நவம்பர் மாதம் வரையான 11 மாதங்களில் 31 மில்லியன் தொகை மாத்திரமே வருமானமாக கிடைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் இது ஏறத்தாழ 40% ஆகும். தற்போதைய சூழ்நிலையில் இது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே. *இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்கும் வகையில் வீணான கடன்சுமைகளில் மாட்டிக்கொள்வது உசிதமானதல்ல.*
மேலும், இயற்கைப் பசளை தயாரிக்கின்ற 'கவசிமா' இயந்திரம் இயங்கக்கூடிய நிலைக்கு வந்துவிட்டதாகவும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை பசளைகளை விற்பனை செய்வதன் மூலம் வருடமொன்றிற்கு 80 மில்லியன் மேலதிக வருமானம் கிடைக்கும் என்று ஏற்கனவே நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தீர்கள். பெறப்படும் இப்பாரிய கடனை திருப்பி செலுத்துவதற்கான முக்கிய வருமான வழியாக இதனையே முன் வைத்தீர்கள். 'தற்போது கவசிமா இயங்க தொடங்கி விட்டது. இதிலிருந்து கிடைக்கும் வருமானம் எப்படி?' என வினவியபோது, அதற்கு இன்னும் ஆறு மாதமாகலாம் என்று கடந்த சபை அமர்வின் போது கூறினீர்கள். எனவே இந்த வருமானம் கேள்விக்குரிய ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. மேலும் அட்டாளைச்சேனையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கவசிமா இயந்திரம் இயங்க தொடங்கிய போதிலும் இன்னும் சபைக்கு கணிசமான வருமானம் தரும் ஒன்றாக அது மாறவில்லை என்பதாகவும் இப்போது அது இன்னுமொரு நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.
எனவே, *கவசிமா தரும் என எதிர்பார்க்கப்படும் வருமானத்தை நம்பி இப்பாரிய கடன்-வட்டி சுமைக்குள் நகர சபையினை தள்ளிவிடுவது ஏற்கக் கூடிய ஒன்றல்ல.*
மேலும் கவசிமா மூலம் கிடைக்கும் 80 மில்லியன் தொகை வருமானம் கிடைப்பது உண்மையெனில், அவ்வாறு கிடைக்கும் வருமானங்களை வைத்தே கட்டம் கட்டமாக இக்கடைத்தொகுதி அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளவும் முடியும். அதன் மூலம் நமது சொந்த நிதியைக்கொண்டே நமக்கான எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை உருவாக்க முடியும்.
*அந்த அடிப்படையில் பார்த்தாலும் கூட இப்பாரிய கடன் தொகையினைப் பெற்று வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை.*
மேலும், இப்பாரதூரமான விடயம் தொடர்பில் அறிந்துகொண்ட
நமது ஊரின் உலமாக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு உங்களை நேரில் சந்தித்து கடன் பெறுவதை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். *அவர்களது ஆலோசனைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே அறிகிறோம்.*
எனவே, நாம் மேலே முன்வைத்துள்ள காரணங்கள் மற்றும் நியாயங்களின் அடிப்படையில் இப்பாரிய கடன் தொகை பெறும் திட்டத்தை கைவிட்டு , வேறு ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பிலான எமது கரிசனைகளையும் கவலைகளையும் உயர் அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வமாக நாம் தெரிவித்துள்ளோம் என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
நன்றி.
Eng. அப்துர் ரஹ்மான்,
ALM சபீல் நழீமி.
ஜம்ஹூத் நிசா மஸுத்
பஹ்மியா ஷெரீப்,
கா.குடி நகர சபை உறுப்பினர்கள்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)
0 comments :
Post a Comment