மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இதில் மறைப்பதற்கு எதுவும் இருக்க முடியாது. உண்மையில் டொலர் கிடைத்திருந்தால், ரூபாவின் பெறுமதி அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் , கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
மத்திய வங்கியின் கையிருப்பு $3.1 Billion உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்திருக்கும் அறிக்கை தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:-
மத்திய வங்கியின் கையிருப்பு $3.1 Billionனாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார். அப்படியாயின் அந் நிதி எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் எமக்கு தெரியப்படுத்த அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் இந்தப் பணம் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்ற விடயத்தை ஏன் மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எதற்காக மறைக்க வேண்டும் என கேட்கின்றேன். உண்மையில் மத்திய வங்கி தெரிவிப்பது போல் பணம் கிடைத்திருந்தால் அதனை எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்பதை பகிரங்கமாக தெரிவிக்க முடியும். அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
ஆனால் எம்மை பொறுத்தவரை, வருடத்தின் இறுதியில் நாம் இருப்பதால், மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் எம்மிடம் எந்தளவு பணம் இருக்கின்றது என்பதை காண்பிப்பதற்கே அவர் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றே நினைக்கின்றேன்.
உண்மையில் எமது கையிருப்பு அதிகரித்திருந்தால், துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்களை விடுவிக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால், மத்திய வங்கி கூறுவது போல் டொலர் கிடைத்திருக்கின்றதென்பதை ஏற்றுக் கொள்ளமுடியும்.
அவ்வாறு இல்லாமல் டொலர் கிடைத்திருக்கின்றது. ஆனால் அது எவ்வாறு கிடைத்தது என்பதை தெரிவிக்கமாட்டோம் என தெரிவிப்பதாக இருந்தால், அஜிட் நிவாட் கப்ரால் மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டிருக்கின்றார் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.
அத்துடன் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி வரைக்கும் நாங்கள் $1.3 Billion வரை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. டிசம்பர் மாதம் எவ்வளவு தொகை செலுத்தியிருக்கின்றது என்பது எமக்குத் தெரியாது. என்றாலும் ஜனவரி மாதம் $500 Million பிணைமுறியாக செலுத்த வேண்டிருக்கின்றதுடன் ,வேறு கடன் மற்றும் வட்டியும் நாடு செலுத்த வேண்டியிருக்கின்றது.
அத்துடன் நாடு அடுத்த வருடத்தில் சுமார் $7 Billionயை கடன் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டி இருக்கின்றது. இந்த கடனை செலுத்துவதற்கு நிலையான பணம் இருக்கின்றதா இல்லையா என்பதுதான் பிரச்சினை.
அவ்வாறு இல்லாமல், வருட இறுதியில் மத்திய வங்கியிடம் எந்த அளவு பணம் இருக்கின்றது என்பதை காட்டுவதற்கான கணக்கு சூத்திரமே தற்போது இடம் பெற்றிருக்கின்றது.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் கடனை அடைப்பதற்குரிய எந்த வேலைத் திட்டமும் இல்லை என்பதே தெளிவாகிறது. தற்போது இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என தெரிவிப்பவர்கள் எவ்வாறு தேவையான டொலர்களை நாட்டுக்கு கொண்டு வருவது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். பொருளாதார ஆய்வாளர்கள் இவ்வாறான கற்பனைக் கதைகளை தெரிவித்து, எமது நாட்டின் பொருளாதார நிலையை தரப்படுத்தும் நிறுவனங்களை ஏமாற்ற முடியாது என்றார்.
0 comments :
Post a Comment