தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் இல்லம் ,முற்றுகைக்கு உள்ளானமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய பணிமனைக்குச்சென்று பிராந்திய இணைப்பாளர் எ.ஸி.ஏ.அசீஸிடம் இந்த முறைப்பாட்டை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நேற்று கையளித்தார்.
கடந்த ஞாயிறு (26) திலீபன் நினைவுதினத்தன்று மாலைவேளையில் இம் முற்றுகை இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
பெரியநீலாவணையிலுள்ள உறுப்பினர் ராஜன் வீட்டில் இல்லாதவேளை அங்கு வந்த பொலிசார் வீட்டினுள் புகுந்து தேடுதல் நடாத்திவிட்டு அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகனிடம் விசாரித்துள்ளனர்.
அவர் வெளியே சென்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும் பொலிசார் சுமார் 4மணிநேரம் அங்கு வீட்டைச்சுற்றி நின்றிருந்தனர்.
தனியாக இருந்த அவர்கள் 4மணிநேரம் பதட்டத்துடன் இருந்ததாககூறப்படுகிறது.
இதுவிடயம் தொடர்பில் உறுப்பினர் ராஜனிடம் கேட்டபோது தானில்லாதசமயம் இவ்வாறு நடந்துகொண்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராஜன் மேலும் கூறுகையில் கல்முனைப்பொலிசார் 25ஆம் திகதி என்னிடம்வந்து என்னை தகாதவார்த்தையினால் திட்டிவிட்டு பயம்காட்டி தடைஉத்தரவினை கையளித்துச்சென்றனர். மறுநாள்(26) மாலை 4.30மணியளவில் கல்முனைப்பொலிசாரும் பச்சைஉடை தரித்த ஆயுதம் தாங்கியவர்களும் எனது வீட்டிற்கு வந்து சுற்றிவளைத்து நின்றிருக்கின்றனர். இரவு 8.30 மணிவரை நின்றுவிட்டு மனைவியிடம் விசாரித்துச்சென்றுள்ளனர். நான் வெளியே சென்றுள்ளதனால் அவர்களைக்காணமுடியவில்லை. உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளேன். எனக்கு மனிதஉரிமை ஆணைக்குழுவால் நிம்மதியாக வாழ வகைசெய்யவேண்டும்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் ஒட்டுக்குழுவினராலும் மாற்றுஇனத்தவராலும் உயிர்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது பொலிசாரிடம் முறையிட்டிருந்தேன்.அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். என்றார்.
0 comments :
Post a Comment