இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளரான ஊடக வித்தகர் கலாபூசணம் முபீதா உஸ்மான் தனது 74ஆவது வயதில் காலமானார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (17) திடீரெனெ நோய்வாய்ப்பட்ட இவர் சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் இரவு மரணமடைந்துள்ளார். அன்டிஜன் பரிசோதனையின்போது இவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
இச்செய்தி காதுக்கு எட்டியதும் பேரிடியாக இருந்தது. மீள முடியாத கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வாறாயினும் இறை நாட்டத்தை பொருந்திக் கொண்டு, அன்னாருக்காக துஆச் செய்வதைத் தவிர வேறெந்த சிந்தனையும் எம்மில் பிரதிபலிக்க முடியாது என்கிற யதார்த்தத்தை எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்.
பொது வாழ்வில் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் மிக அன்பாகவும் பண்பாகவும் பழகி வந்த முபீதா உஸ்மான் அவர்கள் பன்முக ஆளுமை கொண்ட ஒரு திறமைசாலியாகத் திகழ்ந்தார். தனது நற்குணங்களினால் அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தார்.
பணிவு, பண்பாடு, அடக்கம், அர்ப்பணிப்பு, நேர்மை, வாய்மை, துணிச்சல், ஆற்றல் என்று அனைத்து பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு சிறந்த பெண்மணியாக இவர் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இத்தகைய சிறந்த பண்புகளைக் கொண்ட முபீதா உஸ்மான் அவர்கள் எழுத்து, கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறை ஈடுபாட்டுக்கு மேலதிகமாக சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். சமூக சேவை என்பது தனது கூடப்பிறந்த குணவியல்பு போன்று வரிந்து கட்டிக்கொண்டு, செயற்பட்டு வந்ததை நாம் கண்டோம்.
தலைநகர் கொழும்பை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான்
அவர்கள் கடந்த 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள இவர் தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணியாற்றியிருப்பதுடன் பின்னர் அரசாங்க தகவல் தினைக்களத்தில் பிரச்சார உத்தியோகத்தராகவும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
2001- 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசு- புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்திய பணிப்பாளர் எனும் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியை துணிச்சலுடன் பொறுப்பேற்று, மிகச் சிறப்பாக கடமையாற்றியிருந்தார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து இஸ்லாமிக் ரிலீப் எனும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தில் திட்ட இணைப்பாளராக கடமையாற்றி, அம்பாறை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார மற்றும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்னின்று உழைத்துள்ளார்.
கலை, இலக்கிய மற்றும் ஊடகத்துறை பணிகளுக்காக கடந்த 2008ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூசணம் விருதையும் ஊடகத்துறை சேவைக்காக கடந்த 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'ஊடக வித்தகர்' எனும் முதலமைச்சர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.
அத்துடன் சமூக சேவைகளை மையப்படுத்தி 2012 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் ஆளுமைப் பெண்ணாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபரினால் முபீதா உஸ்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
அவ்வாறே கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக கடந்த 2020ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் இவர் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ்வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.ரி.என். மற்றும் எம்.ரி.வி. தொலைகாட்சி நிறுவனங்களினால் முபீதா உஸ்மான் அவர்கள், 'ஆளுமைப்பெண்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். இரு நிறுவனங்களினாலும் நாடு பூராகவும் தலா 10 பெண்கள் இவ்விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் இருந்து இவர் மாத்திரமே இரு நிறுவனங்களினாலும் இதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இவை தவிர சிலோன் முஸ்லிம் கவுன்சில், ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன், மருதம் கலைக்கூடல் மன்றம், கலைச்சுடர் ஷக்காப் மௌலானா பவுண்டேஷன் போன்ற சிவில் சமூக, கல்வி, கலாசார அமைப்புகளினாலும் இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தனது குடும்ப சுமைக்கு மத்தியிலும் சமூகத்தில் குடும்பப் பெண்கள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் இதர பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பெண் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும் கூடிய கவனம் செலுத்தி, அவர்களை முன்னிலைக்குக் கொண்டு வருவதில் இவர் அயராது உழைத்து வந்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, இனங்களிடையே நல்லுறவு, ஐக்கியம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் விடயங்களிலும் மக்களுக்கான நலன்சார் சேவைகளை பெற்றுக் கொடுப்பதிலும் கலாபூசணம் முபீதா உஸ்மான் அவர்கள் ஓய்வின்றி பெரும் பங்காற்றி வந்துள்ளார்.
எப்போதும் எவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதிலும் அவர்களது எந்த விடயமாயினும், அவற்றுக்கு முன்னின்று உதவுவதிலும் சாமர்த்தியமாகத் திகழ்ந்த ஊடக வித்தகர்- கலாபூசணம் முபீதா உஸ்மான் அவர்கள், இந்த மண்ணில் ஒரு முன்னுதாரணமிக்க பெண்ணாக வாழ்ந்து, வழிகாட்டிச் சென்றுள்ளார்.
அவரது திடீர் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் இம்மண்ணுக்கு விடை கொடுத்தாலும் சமூக, ஊடக, இலக்கியப் பரப்பில் அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது நல்லமல்கள் மற்றும் சேவைகளை பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கம் வழங்கப் பிரார்த்திப்போம்.
0 comments :
Post a Comment