ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனையில் நேற்று வியாழக்கிழமை வரைக்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 1875 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யும் நிலையில் அதனை பார்வையிட்டு நிலைமகள் தொடர்பில் ஆராயும் வகையில் கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் சபை தவிசாளர் அடங்கலான குழுவினருடன் ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஒட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியினை ஒட்டமாவடி பிரதேச சபையினால் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் திகதி நேற்று வியாழக்கிழமை வரைக்கும் அனைத்து சமூகங்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை வரைக்கும் 1875 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 1737 முஸ்லிம்களின் உடல்களும், 66 இந்துக்கள், 31 கிறிஸ்தவர்கள், 41 பௌத்தம் ஆகிய தேசிய ரீதியில் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டமாவடி சூடுபத்தினசேனையில் உடல்களை அடக்கம் செய்வதில் இடப்பற்றாக்குறை காணப்பட்டு வரும் நிலையில் வேறொரு இடத்தினை அடையாளப்படுத்த வேண்டும் என்று பிரதேச சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சமூகமட்ட அமைப்புக்களாலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் அரசாங்கம், பாதுகாப்பு தரப்பில் எடுத்துக்கொண்ட முயற்சியின் அடிப்படையில் கிண்ணியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் இதனை உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மாநகரில் கொரோனாவினால் மரணமடைவர்களின் உடல்கள் அடக்கம் செய்யும் வேலைத் திட்டங்கள், எதிர்நோக்கும் சவால்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர்; உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்து கலந்துரையாடலை சபையில் மேற்கொண்டு உடல்கள் அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு அடக்கம் செய்யும் முறைமைகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.
கிண்ணியாவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தேசிய ரீதியில் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்;.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிண்ணியாவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் தருவாயில் உள்ளது என கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் காசுதீன் முஹம்மது நிஹார் தெரிவித்தார்.
நாட்டின் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாளுக்கு நாள் மரணங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் உடல்களை ஒட்டமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்து வரும் நிலையில் இடப்பற்றாக்குறை காணப்பட்டு வருகின்றது. இதனால் கிண்ணியாவில் அடையாளப்படுத்தப்பட்ட இடம் எங்களுக்கு அனுமதி கிடைக்கப்பெறும் தருவாயில் உள்ளது.
இதன் நிமிர்த்தம் நாங்கள் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு வருகை தந்து உடல்களை அடக்கம் செய்யும் முறைகள் மற்றும் கையாளும் விதங்கள் பற்றி கலந்துரையாடியதுடன், உடல்கள் அடக்கம் செய்யும் இடங்களும் சென்று அடக்கம் செய்யும் பணியில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம்.
எனவே எங்களுக்கு உடல்களை கிண்ணியா பிரதேசத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடல்களை அடக்கும் பணியினை திறம்பட மேற்கொள்வோம் என்று கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் காசுதீன் முஹம்மது நிஹார் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடவசதியின்மை காணப்படும் நிலையில் கிண்ணியாவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடல்களை சிறந்த முறையில் அடக்கம் செய்வோம் என்று கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், சபை நிருவாக உத்தியோகத்தர் ஏ.அக்பர், கிண்ணியா பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது நாட்டில் கொரோனாவினால் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனையில் நாளாந்தம் முப்பதுக்கு மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருவதுடன், கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை மாத்திரம் ஐம்பது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.அக்பர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment