கொவிட் 19 தொற்று காரணமாகச் சுகாதார அறிவுறுத்தலின்படி நாட்டில் சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன, என்றாலும் மாணவர்களை இலகுவாகச் சென்றடையக்கூடிய தொழிநுட்ப முறைகளைக் கையாண்டு அவர்களை வழிநடத்தவேண்டிய பாரிய பொறுப்பு எம்மனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊவா மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற அறிக்கைகளை ஆராயும் மாதாந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;
மாகாண தொழிநுட்ப குழுவின் ஆலோசனையுடன் ஒன்லைன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இணையக் கல்வியை மிகவும் திறம்பட நடத்துவது தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். என்றாலும் எமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி ஸ்மாட் கல்வியை வழங்குவதில் பல தடங்கல்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களை இலகுவாகச் சென்றடைய எமக்குக் காணப்படும் முதலாவது மார்க்கமாக எமது 'ஊவா வானொலி' காணப்படுகிறது. குறித்த வானொலி அலைவரிசை எமது மாகாண சபையின் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வருவது எமக்கு மேலும் பலமாகக் காணப்படுகிறது. அந்த அலைவரிசையைச் சரியான முறையில் பயன்படுத்தி, மும்மொழியிலும் மாணவர்களைக் கவரக்கூடிய கல்வி நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பில் கூடிய கவனமெடுக்க வேண்டும். அத்துடன் மாகாண சபையின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'ஊவா தீப' பத்திரிகை மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் முடியுமான வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு உறுதுணையான நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார்.
அதேவேளைப் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ள இந்த காலத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுமான வேலைகளை விரைவாக நிறைவுசெய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி. சந்தியா அபன்வெல உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment