கல்முனை பறக்கத்துள்ளாஹ்வின் தேடலில்; அல் ஹாஜ் அப்துல் சமட்தேடலின் சுவடு: 12

ஒருவர் மரணித்த பின்னர் அவரை புகழ்வதோ, அவரது சாதனைகளையும், அனுபவங்களையும் பதிவு செய்வதிலும் பார்க்க, குறிப்பிட்டவர் பற்றிய தகவல்களை சேகரித்து வாழும் போதே வாழ்த்தி, கௌரவப்படுத்துவது மனிதப் பன்பெனக் கருதுகிறேன்.
மரணத்தின் பின்னர் தரவுகளைச் சேகரிப்பது சில வேளை அது சாத்தியமாகாமலும், உண்மைத் தன்னையற்றதுமாக அமைந்து விடவும் வாய்ப்புள்ளது.
ஒரு ஆளுமை தனது கடந்த காலத்தில் செய்த சமூகப் பணிகள் குறித்த பதிவுகள் கிடைக்காமல் விடும்போது அவர் எதுவும் செய்யவில்லை என்பதாக பொருள்கொள்ள முடியாது.
நான் முயன்றுள்ள தேடலின் சுவடுகள் அவ்வாறான ஆளுமைகளின் வாழ்க்கை குறித்து பதிவு செய்ய முயற்சிக்கிறதே தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்ல.
மரியாதைக்கும், அன்புக்கும் உரிய சமூக வலைத்தளத்தில் முதுசங்களில் ஒருவராக கம்பீரமாக செய்றபட்டுவரும், இலத்திரனியல் ஊடகங்களினூடாகவும்,பத்திரிகைகள், மொழிபெயர்ப்பு மற்றும் கல்வியல் செயற்பாட்டில் நீண்டகால சேவை புரிந்த
#அல்ஹாஜ்_அப்துல்_சமட் அவர்கள் இன்று 81 ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.
அவருக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அல் ஹாஜ் அப்துல் சமட்: 
சாய்ந்தமருதில் பிரல்பயமிக்க வைத்தியராக திகழ்ந்த மீராசாஹிபு முகம்மது ஹுஸைன் மற்றும் மீராலெப்பை கதீஜா உம்மா தம்பதிகளுக்கு ஏக புதல்வனாக அப்துல் சமட் 1940.01.13 இல் சாய்ந்தமருதில் பிறந்தார்.
தனது இரண்டு வயதில் தாயை இழந்த இவர் வாப்பம்மாவின் அரவணைப்பிலும் தந்தையின் ஆதரவிலும் 18 ஆவது வயது வரை வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் தன் மனைவி இறந்த போதிலும் மகனை உரிய முறையில் வளர்க்க வேண்டுமென தந்தை அதிக பிரயனத்தனங்களை மேற்கொண்டார்.
அப்போதைய நிந்தவூர் யூனியர் ஆங்கிலப் பாடசாலையில் (தற்போதைய அல் அஸ்ரக்) தரம் 01 முதல் 05 வரையான ஆரம்பக் கல்வியைக் கற்றார்.
தரம் 06 முதல் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இங்கு பிற்காலத்தில் மருதமுனையின் அடையாளங்களாக காணப்பட்ட மருதூர்கனி, மருதூர் கொத்தன், யூ.எல்.ஏ. மஜீட் ஆகியோருடன் சக மாணவனானார்.
இங்கு இவர்களுக்கு கற்பித்த புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் ஆசிரியரின் கற்பித்தல் போக்கில் ஈர்க்கப்பட்டு அவரது விருப்பத்துக்குரிய மாணவனாக மாறினார். புலவர்மணி ஆ.மு சரிபுத்தீன் அவர்களுக்கு ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்ட போது, இவர் தரம் 07 இல் இப்பாடசாலையிலிருந்து விலகினார்.
புலவர்மணி ஆ.மு சரிபுத்தீன் அவர்கள் அப்போதைய கல்முனை அரசினர் ஆண்கள் கலவன் பாடசாலைக்கு (தற்போதைய அல் அஸ்ஹர்) இடம்மாற்றம் பெற்றபோது அப்துல் சமட் அவர்களும் அப்பாடசாலையில் சேர்ந்து தரம் 08 முதல் SSC வரையான கல்வியை தொடர்ந்தார்.
SSC பரீட்சையில் சித்தியெய்திய இவர் 1961 இல் ஆசிரியராக நியமனம் பெற்று, மாவடிப்பள்ளி முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியர் கடமையை ஆரம்பித்து ஒரு வருடம் கடமையாற்றினார்.
பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1962 முதல் 1964 வரையில் பயிற்சி பெற்று, 1964இல் அநுராதபுரம் விவேகானந்தக் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அநுராதபுரம், மிகிந்தலிலுள்ள மிகிந்து சிங்கள மகா வித்தியாலயத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தை கற்பித்தார்.
ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டருந்த இக்காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்திய இவருக்கு பேராதனைப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.
அநுராதபுரத்தில் இருந்து கொண்டு கண்டியில் பட்டப்படிப்பை தொடர முடியாத காரணத்தினால் கண்டி உடதும்பர ஜாமிஉல் அஸ்ஹர் மகா வித்தியாலத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டு முழு நேரமும் பல்கலைக்கழத்தில் கற்க முடியாத காரணத்தினால் வெளிவாரியாக பட்டப்படிப்பை தொடர முடியுமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல்கலைக் கழகப் படிப்பை தொடர்ந்தார்.
பல்கலைக் கழத்தில் முதல் வருடம் பொருளியல் பாடத்தில் இவர் பெற்ற A சித்தி காரணமாக அப்பாடத்தை விசேடமாக ஆங்கிலத்தில் கற்றார். இதன் காரணமாக இறுதி வருடத்தை முழு நேரமாக கற்பதற்கான கற்கும் விடுமுறை (study leave) இச்சந்தர்பபத்தைப் பயனபடுத்தி B.Com கற்கையை நிறைவு செய்தார்.
பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் வரையில் பாடசாலை ஆசிரியராக சுமார் 12 வருடங்கள் தொழில் புரிந்து வந்த இவர், பின்னர் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் வணிக விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
சில வருடங்கள் இங்கு கடமையாற்றிய பின்னர் நாவலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொலைக் கல்வி நிறுவனத்திற்கு (தற்போதைய திறந்த பல்கலைக் கழகம்) தமிழ் மொழிப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அக்காலத்தில் கொழும்பில் ஏற்பட்ட கலவர சூழல் காரணமாக சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று 1977 முதல் 1980 வரையில் பணிபுரிந்தார்.
கல்வி பயிற்சிக்காக வெளி நாடுகள் பலவற்றிற்கு விஜயம் செய்துள்ள இவர், 1980 களில் நைஜீரியா, கம்பியா ஆகிய நாடுகளில் விரிவுரையாளராக கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு 1983 வரையில் அந்த நாடுகளில் கடமை புரிந்தார்.
1983 நாடுதிரும்பி சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அதிபராக 1990 வரையில் கடமையாற்றினார்.
1990 முதல் 1991 வரையில் தெஹிவலை தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றும் காலத்தில் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான தமிழ்ப் பிரிவொன்று அமைவதில் முன்னின்று உழைத்ததோடு அப்பிரிவில் விரிவுரையாளராக கற்பித்து 1992 இல் ஓய்வு பெற்றார்.
அப்துல் சமட் அவர்கள் (B.Com (cey), MBA, FBIM, Dip in English,Dip in commerce, Trained teacher) உள்ளிட்ட கல்வித் தகுமைகளைப் பெற்றுள்ளார்.
கல்வி மீதான தன் சமூக அக்கறையோடு கடமையாற்றியவர் இவர். தொழில் நுட்பக் கல்வியில் ஆர்வமின்றிருந்த முஸ்லிம் மாணவர்கள் விழிப்புணர்ச்சி பெறும் வகையில் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சிப் பேட்டிகள் நடத்தினார்.
ஓய்வு பெற்ற பின்னர் நழீம் ஹாஜியார் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இக்றா தொழில் நுட்பக் கல்லூரியின் ஸ்தாபக அதிபராக 1992 முதல் 1995 வரையான காலங்கள் திறம்படப் பணியாற்றியவர்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் புனர்வாழ்வு புணரமைப்பு மற்றும் கப்பல்துறை அமைச்சாராக பதிவி வகித்த காலத்தினுள் 1995 முதல் 2000 வரையில் அமைச்சின் ஆலோசகராக இருந்ததோடு மட்டுமல்லாது, அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் RVTC,DVTC பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியவராவார்.
அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் மறைவிற்குப் பின்னர்; அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் அவர்களின் விஷேட ஆலோசகராகவும் 2000-2002 வரையில் பணியாற்றினார்.
இவர் கொண்டிருந்த ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழித் தேர்ச்சிகள் காரணமாக 2002 களில் வீரகேசரி பத்திரிகையிலும், IMO (UN) இலும் தமிழ், ஆங்கில, சிங்கள மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வாறாக ஊடகத்தில் பணிபுரியும் காலத்தில் அதிகம் எழுதுவதற்கானக் கிடைத்த சந்தர்ப்பங்கள் சரியாகப் பயன்படுத்தினார். இதற்காக தனக்கிருந்த கல்வி, அறிவு, அனுபவம் என்பன பெரிதும் உதவின.
அப்துல் சமட் அவர்கள் ஓய்வில்லாமல் செயற்பட்டு வருகின்ற ஒருவர். அண்மைக் காலமாக, மொழி பெயர்பபு இலக்கியத்தின் மூலம் அரும் பணியாற்றி படைப்பாளர்களை உலகின் பல பாகங்களுக்கும் அறிமுகம் செய்து வருகின்றார். தமிழில் பதிவிடும் பதிவென்றை சில நிமிடங்களில் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கும் திறமை இவருக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
1962இல் சாய்ந்தமருதைச் சேர்ந்த முகைதீன்பாவா ஹவ்வா உம்மாவைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனஸ் (முகாமையாளர் அவுஸ்திரேலியா), அஸ்கர் (Human Resource Manager), அஷ்ரஃப் ஏ சமட் (வீடமைப்பு அமைச்சு, ஊடகவியலாளர்), அக்ரம் (டுபாய்), அனீஸ் (உளவியல் விரிவுரையாளர்) ஆகிய மகன்களும், அஸீனா (டுபாய்), அனீஸா ஆகிய மகள்களுமாக ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
அப்துல் சமட் சேர் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடக் கிடைத்த இன்றை சந்தர்ப்பத்தில் அவரது உடல் 81 வயதுடையவராக அல்லாமல், ஒரு இளைஞனின் குரல் போன்றிருந்தது.
புலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீன் அவர்களின் மாணவன் என்று சொல்வதில் சந்தோஷப்பட்டுக் கொள்கின்ற இந்த ஆளுமையின் பன்பு பாராட்டத்தக்கதே.
அகல விரிந்த பெருத்த தோற்றமில்லாத மெலிந்த உடலும், மென்மையான நடத்தையும், இளகிய மனமும் கொண்ட அல் ஹாஜ் எம்.எச். அப்துல் சமட் அவர்கள் சுகதேகியாக நீண்ட ஆயுளுடன் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
கல்முனை.
2021.01.13
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :