கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நேர்காணல்..

ல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீல் வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.

நேர்காணல் – பைஷல் இஸ்மாயில்- 

கேள்வி: கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

பதில்: மனிதனின் காலவோட்டத்தில் என்னவெல்லாமோ நடந்து முடிந்து போகின்றன. அவற்றுள் நல்லவைகள் கெட்டவைகள் என்று எல்லாமே அடங்கும். ஆர்ப்பரித்த உலகமே அடங்கிப் போயுள்ளது. விண்ணைக் கிழித்த விமானங்கள் தரையோடு முடங்கிப் போயுள்ளன. பீரங்கி வேட்டுகளும், குண்டு மழையும் காணாமல் போயுள்ளன. வல்லரசுகள் பேயடித்தது போலிருக்கிறது. உலகமே ஒரு மயான அமைதியில் உறக்க நிலையில் காணப்படுகிறது.

நெடுநாட்களுக்குப் பிறகு பாலஸ்தீனம் நிசப்தமாக இரவுகளைக் கழிக்கின்றன. இவ்வாறுதான் உலகின் நிலைமைகள் காணப்படுகின்றன.

கேள்வி: ஏன் இந்த மாற்றம்? எதனால் இந்த தடுமாற்றம்?

பதில்: எல்லாமே கொரோனா தந்த மாற்றம். கடந்த வருட இறுதிப் பகுதியில், சீனாவின் வுஹான் நகரத்தில் புதிதாக உருவான கெரோனா வைரசின் தொற்றுகை இன்று அதன் எல்லைகளைக் கடந்து உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளையும் கதிகலங்க வைத்துள்ளது.

இதுவரை ஏறக்குறைய 68 இலட்சம் மக்களுக்கு தொற்றியுள்ள கொரோனா வைரசினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 இலட்சத்தைத் தொட்டுவிட்டது.

கேள்வி: எமது நாட்டு நிலவரம் எவ்வாறு உள்ளது?

பதில்: இலங்கையிலும் இதுவரை 11 பேரை பலிகொண்டிருப்பதுடன், 1,845 பேர் இந்த வைரஸின் தொற்றுக்குள்ளாக
யிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வைரஸானது முன்னர் அறியப்பட்டிராததாக இருந்ததால், அது 2019 நொவல் கொரோனா வைரசு எனப் பெயரிடப்பட்டது.

இவ்வைரஸினால் உருவாகும் நோயானது உலக சுகாதார நிறுவனத்தினால் 2020.02.11 ஆம் திகதி கொவிட்-19 எனப்பெயரிடப்பட்டு, 2020.03.11 ஆம் திகதி எல்லைகள் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்நோய் பரவக்கூடியது எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.

கேள்வி: எமது நாட்டில் கொவிட் 19 எவ்வாறு பரவுகிறது?

பதில்: நாட்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள எமது அழகிய இலங்கைத் தீவினுள் எவ்வாறு இந்த வைரஸ் உள்நுழையும், எவ்வாறு கொவிட்-19 நோயானது பரவும் என்று அதிகமாக யோசித்து நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. எமது நாடு அமைந்திருப்பது பூகோள ரீதியாக ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலாகும்.

கொவிட்-19 நோய் பரவும் நாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வருகை தருபவர்கள் மூலமாகவே இந்நோயை உருவாக்கும் கொரோனா வைரஸுகள் எமது நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி 27 ஆம் திகதி சீன நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் முதலாவது நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.

அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அவர் இலங்கைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மார்ச் மாதம் 11 ஆம் திகதி இரண்டாவது (முதலாவது இலங்கையர்) கொவிட்-19 நோயாளி அடையாளம் காணப்பட்டார். இவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயண வழிகாட்டியாகும்.

அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களின் மத்தியிலும், அவர்களோடு நெருங்கிய தொடர்புபட்டவர்களின் மத்தியிலும் இந்நோய் அடையாளம் காணப்பட்டது. திடீரென இந்நோயின் பரவுகை ஒரு அச்சுறுத்தலான கட்டத்தையடைந்தபோது, மார்ச் 18 ஆம் திகதியிலிருந்து நாட்டின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டு வெளிநாட்டவர்களின் வருகை நிறுத்தப்பட்டது. ஆயினும், ஏற்கனவே வருகை தந்திருந்தவர்களின் மத்தியிலும், அவர்களின் நெருங்கிய தொடர்பாளர்களின் மத்தியிலும் இந்நோய் அடையாளம் காணப்பட்டு வந்தது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடையே கொரோனா பரவல் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களும், அங்கிருந்து வருகை தந்த எமது நாட்டவர்களும் விமான நிலையத்தில் வைத்து வேறாக்கப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஏனையோர் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்
பட்டனர். இச்செயற்பாட்டில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிசார் மற்றும் முப்படையினர் அதிசிறப்பாக செயற்பட்டனர். இன்னும் செயற்படுகின்றனர்.
அதன் பயனாக, சமூக மட்டத்தில் இந்நோயின் பரவுகை இப்போது வரையும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை சமூக மட்டத்தில் எந்த நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை.

கேள்வி: சமூக மட்டத்தில் கொவிட்-19 பரவல் இல்லையெனில், இன்னும் அதிகமான நோயாளிகள் அடையாளம்
காணப்படுகிறார்களே அதற்கான காரணம் என்ன?

பதில்: கடற்படையினரின் மத்தியில் இந்நோய் திடீரென மிகவும் வேகமாகப் பரவியது. அது கம்பஹா மாவட்டத்தின் சுதுவெல்ல பகுதியில் கடமையில் இருந்தவர்கள் மூலமாக பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிரகாரம், வெலிசறை கடற்படை முகாம் தற்காலிகமாக மூடப்பட்டு அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு அதுவும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரை ஏறக்குறைய 900 கடற்படையினரும் அவர்களின் நெருக்கமானவர்களும் (தொற்றுக்குள்ளான மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ அரைவாசிப்பேர்) இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கை நிலவரம் இவ்வாறிருக்க, தொழிலுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்ற பல்லாயிரம் பேர் நாடு திரும்புவதற்கான வழிகளின்றி நிர்க்கதியான நிலையில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உள்ளனர்.

அவர்களை நாட்டுக்கு அழைத்து வரவேண்டிய தார்மீகக் கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. அதே நேரம், அவர்களின் மூலமாக நாட்டுக்குள் கொரோனா பரவிவிடாமல் பாதுகாக்கவேண்டிய கடப்பாடும் அரசுக்கு உள்ளது.

அதனடிப்படையில் கடந்த சில நாட்களாக, கட்டம் கட்டமாக அவ்வாறானவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் விமான நிலையத்திலிருந்தவாறே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 14 நாட்கள் கண்காணிக்கப்படுகிறனர்.

பின்னர் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனாத் தொற்றுக்குள்ளாக
வில்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். தத்தமது வீடுகளிலும் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்
படுகின்றார்கள்.

பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால், உரிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சையின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் கொரோனா வைரசுகள் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கும் இன்னும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுகிறார்கள்.

இவ்வாறானவர்களின் மூலம் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்களே தவிர சமூக மட்டத்தில் எந்த நோயாளியும் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கேள்வி: விமான நிலையம் திறக்கப்படும்போ
து கொவிட் 19 இன் தாக்கம் அதிகரிக்கலாம் அல்லவா? அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?

பதில்: விமான நிலையத்தின் வழமையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாமல் வெறும் நூற்றுக் கணக்கானவர்கள் வருகை தரும்போது இந்த நடைமுறை சாத்தியமாகும். ஆயினும், விமான நிலையத்தின் வழமையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரக் கணக்கானோர் வருகை தர ஆரம்பித்தவுடன் நிலமை மாறிப் போகலாம். விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இது எந்தளவுக்கு வெற்றிகரமாகும் என்பது ஒரு கேள்விக்குறியாகும்.
அதற்காக, தொடர்ந்தும் விமான நிலையத்தை மூடிவைப்பதோ அல்லது நாட்டை வெளித்தொடர்புகள் இல்லாது வைத்திருப்பதோ எமது நாட்டின் எதிர்காலத்துக்கு பொருத்தமானதாக இருக்காது. வெளிநாட்டு வேலைவாய்ப்பும், உல்லாசப் பயணிகளின் வருகையும் எமது நாட்டிற்கு வருமான மீட்டித்தரும் முக்கியமான இரு துறைகளாகும்.

கொரோனாத் தாக்கத்தை தொடர்ந்து விமான நிலையமும் மூடப்பட்டுள்ள நிலையில் இவை இரண்டும் கேள்விக்குறியாகியுள்ளன. எனவே குறைந்த பட்சம் உல்லாசப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்
டியது நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானகும்.

இந்நிலையில் கொரோனா பரவாமல் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் நூறு சதவீதம் வெற்றிகாண முடியாது என்பது யதார்த்தமான உண்மையாகும்.
கொவிட்-19 நோயானது எந்த நொடியும் பரவலாம் என்ற எதிர்பார்ப்புடனும், தவிப்புடனுமே காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு சமூக மட்டத்தில் ஒரு நோயாளர் அடையாளம் காணப்பட்டால் அது அழிவின் ஆரம்பமாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமேயில்லை.

கேள்வி: அவ்வாறாயின், நாம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்?

பதில்: எமது அன்றாட வாழ்க்கையில் கெரோனாவுடனேயே நாம் இனிமேல் வாழ வேண்டியிருக்கும். எம்மைச் சூழவும் கொரோனாத் தொற்றுடையவர் உள்ளனர் என்ற எதிர்பார்ப்புடனேயே நாம் நகர வேண்டியிருக்கும். எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கொரோனா வைரஸானது காற்றின் ஊடாகப் பரவுவதில்லை. இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர் இருமும்போது அல்லது தும்மும்போது வீசப்படும் அவரின் சுவாசத் தொகுதியின் திரவத்துணிக்கைகள் (சளித்துணிக்கைகள்) இந்த வைரஸுக் கிருமிகளைக் கொண்டதாக இருக்கலாம்.

இத்துணிக்கைகள் நேரடியாகவோ அல்லது சுற்றாடலில் படிந்து அதன் மூலமாகவோ ஒருவரின் கைகளில் பட்டு, கழுவப்படாத அக்கைகளினால் அவரின் மூக்கு, கண், வாய் என்பனவற்றைத் தொடும்போது இவ்வைரசுக் கிருமிகள் இன்னுமொருவரைச் சென்றடையும்.

இந்த வைரஸுக் கிருமிகள் எவ்வாறு பரவும் என்ற அடிப்படையான இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டு, அதன் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் அத்தியாவசியமான விடயங்களில் ஒவ்வொரு தனிநபரும் மிகக் கவனம் செலுத்தி அதை இனிமேல் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

சமூக இடைவெளியைப் பேணுதல், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய இந்த மூன்று விடயங்களும் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பின்பற்றப்பட வேண்டும். அரச அலுவலகமாகட்டும், தனியார் வேலைத்தளமாகட்டும், மத ஸ்தலங்களாகட்டும், பொதுப் போக்குவரத்தாகட்டும், பொது நிகழ்வுகளாகட்டும், எதுவாகினும் இந்த மூன்று விடயங்களிலும் மிக அவதானம் செலுத்தி செயற்படவேண்டும்.

கேள்வி: கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உள்ள நாம், எமது அன்றாட வாழ்க்கை நடைமுறையை எவ்வாறு கொண்டு செல்வது?

பதில்: எமது அன்றாட வாழ்க்கையில் நாம் ஏற்கனவே பழகிப் போயிருக்கின்ற கூடுதலான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. பல புதிய விடயங்களை கைக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. உதாரணமாக, ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைலாகு கொடுத்து பழகி விட்டோம்.

ஆனால், கொரோனா பீதியினால் நாம் இனிமேல் அதனைச் செய்ய முடியாது. ஏனெனில், இந்த வைரஸுகள் பரவுவதில் கைகள் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதற்குப் பதிலாக, பாரம்பரியமான முறைகளான கைகூப்பி வணங்குதல், முகமன் கூறுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தப் பழக வேண்டியதாகி விட்டது.

சில விடயங்கள் அசௌகரியமாக அல்லது கடினமாகத் தோன்றினாலும், கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டுமாயின் அவற்றை நாம் பேணித்தான் ஆகவேண்டும். உதாரணமாக, குறைந்தது ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுவது என்பது பல சந்தர்ப்பங்களில் நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழுந்தாலும், மாற்றுவழி இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இரு சக்கர வண்டியிலிருந்து பேரூந்து மற்றும் விமானம், புகையிரதம் என்று அனைத்து விதமான பொதுப் போக்குவரத்தின் போதும் சமூக இடைவெளியைப் பேணவேண்டியது எம்மீது திணிக்கப்பட்டுள்ள காலத்தின் கட்டாயமாகும். கடைத்தெருவிலிரு
ந்து மக்கள் ஒன்று சேரக்கூடிய அனைத்து விதமான இடங்களிலும் சமூக இடைவெளியைப் பேணாமல் இனிவரும் காலங்களில் நாம் நடந்து கொள்ள முடியாது.

கொரோனா வைரசுகள் எவ்வாறு பரவும் என்ற அடிப்படையை விளங்கிக்கொண்டு அதற்கேற்றவாறு நாம் எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, அலுவலகங்களில் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்தல், ஒருவருடைய பொருளை இன்னொருவர் பாவித்தல், நெருக்கமாக இருந்து அரட்டையடித்தல், பாதுகாப்பற்ற முறையில் தும்முதல் இருமுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள பழகவேண்டும்.

அதேபோன்று, அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ளுதல், முகக் கவசம் அணிதல், அலுவலகத்தின் வெளிப்பயனாளிகளின் தேவைகளை முடிந்தவரை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தீர்த்துவைத்தல், அல்லாதுபோனால் அவர்களின் நேரடி வருகை அவசியம் எனும் பட்சத்தில் எல்லோரையும் ஒரே நேரத்தில் வரவைக்காது முன்கூட்டியே நேர அறிவிப்புடன் ஒவ்வொருவராக வரவைத்தல் போன்ற விடயங்களைக் கடைப்பிடிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

கேள்வி: முகக்கவசம் அணிவது
தொடர்பில் வெவ்வேறான
கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் இதனை யார், யார் அணிய வேண்டும் என்பது பற்றி தெளிபடுத்த முடியுமா?

பதில்: முகக் கவசம் பயன்படுத்தும் விடயத்தில் பலவிதமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், எம்மைச் சுற்றியிருப்பவர்களில் எவர் கொரோனா வைரஸைத் தாங்கியிருக்கிறார் என்பது தெரியாத நிலையிலும், எமது கைகளினால் அடிக்கடி மூக்கு வாயைத் தொடுவதனைத் தவிர்ப்பதற்காகவும் முகக் கவசத்தை அணியவேண்டிய நிர்ப்பந்தம் எம்மைக் கட்டிப்போட்டுள்ளது.

முகக் கவசம் யார் எப்போது எவ்வாறு அணிவது என்பது பற்றி சரியான முறையில் தெரிந்து கொள்ளாததால், அவ்வப்போது குளறுபடிகள் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் மூக்கு, வாயினுள் நேரடியாக செல்வதனைத் தடுப்பதற்காக என்பதனை விட, கழுவப்படாத தமது கைகளினால் மூக்கு, வாயைத் தொட்டு விடக் கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளியைப் பேண முடியாமல் முன்னாலிருப்பவர் தும்மும்போதும் இருமும் போதும் நேரடியாக சளித் துணிக்கைகள் விசிறப்பட்டுவிடாமலும் தடுப்பதற்காகவே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வீட்டிலிருக்கும் போதும், தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போதும், தனியாக வேலை செய்யும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கண்டிப்பில்லை.
அணிந்தால் தவறுமில்லை.

வீட்டைவிட்டு வெளியே செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள
்ளவர்கள், காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய் அறிகுறி இருப்பவர்கள், பொது இடங்கள் அல்லது மக்கள் ஒன்று சேரும் இடங்களில் கலந்துகொள்பவர்க
ள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள், கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலை முடித்தவர்கள், கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களோடு நேரடித் தொடர்புடையவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்ற அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும்.

இவர்களுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் பலரும் வந்து போகக் கூடிய இடங்களில் வேலை செய்பவர்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், வீடு வீடாகச் சென்று அளவீடுகளை எடுக்கும் மின்சார மற்றும் நீர் வழங்கல் சபை போன்றவற்றில் கடமையாற்றுபவர்கள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், முடிவெட்டுபவர்கள், தபால் ஊழியர்கள் போன்றோரும் முகக் கவசம் அணிவது முக்கியமாகும்.

கேள்வி: இது தவிர வேறு என்ன
விடயங்களில் அவதானம்
செலுத்தவேண்டும்?

பதில்: பாடசாலைகள், தனியார் வகுப்புகள், மத தலங்கள் என்பன இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளன. அவ்வாறான இடங்களில் பல முற்காப்பு நடவடிக்கைகளை இப்போதிருந்தே செயல் வடிவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பாடசாலைகளைப் பொறுத்தளவில் 50 மாணவர்களுக்கு ஒரு கை கழுவும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்
டுள்ளது. அதன்படி, குறைந்தது இரண்டு அல்லது மூன்று வகுப்பறைகளுக்கு பொதுவாக ஒரு கை கழுவும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக் கூடிய சுமார் 46 சந்தர்ப்பங்களில் எவ்வாறான விடயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேவையான சந்தர்ப்பங்களில் அந்தந்த பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளின் முறையான அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அதன் பிரதியை அந்தந்த உள்ளூராட்சி சபைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முக்கியமாக கவனம் செலுத்தவெண்டிய அம்சங்கள் பின்வருமாறு காணப்படுகின்றது.

வாடகை வாகனங்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தல்: ஒரு இருக்கையில் ஒரே குடும்பத்தைச் சாராத இருவருக்கு மேல் பயணிக்க முடியாது. இயன்றவரை கைகளைத் தொற்றுநீக்கும் தயாரிப்புகள் இருக்க வேண்டும். பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மீதிப் பணம் வராதவாறு பணப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.
இயலுமானவரை பயணிகளே அவரவரின் பொதிகளை ஏற்றியிறக்க வேண்டும். 

தேவையில்லாமல் வாகனத்தின் உள் மேற்பரப்புகளை பயணிகள் தொடுவதனைத் தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

இருசக்கர வண்டியில்
பயணித்தல்: கொவிட்-19 பரவும் இக்காலத்தில் இருசக்கர வண்டியில் பயணிப்பதே சாலவும் சிறந்ததாகும். ஒரே குடும்பத்தைச் சாராத இன்னொருவர் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும். வண்டியை செலுத்துபவர் முகக் கவசம் அறிந்திருக்க வேண்டும்.
பயணம் முடிந்த பிறகு கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிக்கான நடைபாதைகளைப்
பயன்படுத்துதல்: குழுவினராக அல்லாமல் தனித்தனியாக இயங்குதல், தொங்கோட்டம் மற்றும் சைக்கிள் சவாரி என்பவற்றையே மேற்கொள்ளலாம். இரவல் சைக்கிள் பயன்படுத்துவதாயின் ஒவ்வொரு தடவையும் பயன்படுத்திய பிறகு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும், எதிரெதிர்த் திசைகளில்லாமல் ஒரே திசையிலேயே அனைவரும் நகர வேண்டும், உணவகங்கள் அமைக்கப்பட்டிருக்குமாயின் அவற்றுக்குரிய நடைமுறைகள் பேணப்பட வேண்டும்.

கலந்துரையாடல்கள் மற்றும் குழுநிலைக் கூட்டங்களை நடாத்துதல்: இயன்றவரை ஸ்கைப், சூம், வட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ போன்றவற்றின் ஊடாக இவற்றை நடத்த முயற்சித்தல், நேரடிப் பங்குபற்றுதல் அவசியமெனக் கருதும் பட்சத்தில் அதிகளவானவர்கள் கலந்து கொள்வதனைத் தவிர்க்க முயற்சித்தல், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி கலந்து கொள்பவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துதல், கலந்து கொள்பவர்களின் பெயர் விபரங்கள் முறையாகப் பேணப்பட வேண்டும்.

சுவாச நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கலந்துகொள்வதனைத் தவிர்த்தல், பொது வாகனங்களில் பயணிப்பதனைத் தவிர்த்தல், கலந்துரையாடல் நடைபெறும் இடம் நன்கு காற்றோட்டமுள்ளதாக இருத்தல், இயன்றவரை நுழைவாயிலின் கதவுகளைத் தொட்டுத் திறப்பதனைத் தவிர்க்க திறந்தே வைத்திருத்தல், குறைந்த இடைவெளியில் எதிரெதிரே அமர்ந்திருக்கும் விதமாக ஆசனங்கள் இருக்கக் கூடாது, கை குலுக்குவதனையோ, ஆவணங்கள் மற்றும் பேனை போன்றவையுட்பட ஒலிவாங்கி சாதனங்கள் மற்றும் எழுது கருவிகளை பொதுமையாக எல்லோரும் பயன்படுத்துவதனையோ தவிர்த்தல், சகலரும் முகக் கவசம் அணிந்திருத்தல், உணவு பரிமாறப்படுமாயின் அதற்குரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல், இயன்றவரை குளிரூட்டிகளைப் பயன்படுத்தாதிருத்தல் வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :