முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி
மொனராகலை மாவட்டத்தில் கடந்த மூன்று தசாப்த காலமாக அரசியல் செயற்பாட்டில் இருக்கும் நான் வெள்ளவாய தொகுதி உறுப்பினராகவே செயற்பட்டு வந்துள்ளேன். இந்த பொதுத்தேர்தலுடன் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகளையும் தேவைகளையும் உணர்ந்து கொண்டவனாக எதிர் கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட பாராவில தோட்ட சமூக நலன்புரி நிலையத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த நான்கரை வருடகாலமாக பாராளுமன்ற உறுப்பினராகவும் அதற்கு முன்னதாக மாகாண சபை உறுப்பினராகவும் பல அபிவிருத்திப் பணிகளைச் முன்னெடுத்துள்ளேன்.
எனது தொகுதியில் பெருந்தோட்டப் பகுதிகள் அடங்காத போதும் மாவட்ட பிரதிநிதி என்றவகையில் என்னால் இயன்ற அளவில் மொனராகலை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் உதவிகளை வழங்கி உள்ளேன்.
பெருந்தோட்டப் பகுதி மக்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் ஆலயங்களுக்கான உதவிகளாகவே இருந்தன. அத்தகைய கோரிக்கைகளுக்கு அமைய பத்து தோட்டங்களுக்கு சுமார் இரண்டு மில்லியன் பெறுமதியான உதவிகளை என்னால் பெற்றுக்கொடுக்க முடிந்தது.
அந்தவகையில் மொனராகலை மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் தேவைப்பாடுகளைக் கண்டறிந்து மாவட்ட அபிவிருத்தியில் அவர்களது கலை, கலாசார, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளையும் இணைத்து முன்னெடுக்க உறுதி கொண்டுள்ளேன்.
கடந்த நான்கரை வருட காலமாக நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட திலகராஜ் ஊடாக மலையகத் தமிழ் மக்கள் குறித்த பல விடயங்களை ஆதாரங்களுடன் நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம். அந்த மக்களின் பிரச்சினைகளை அவர் எடுத்துச் சொல்லும் விதமும் அதனைத் தீர்ப்பதற்காக அவர் காட்டும் வழிமுறைகளும் முற்போக்கானதும் யதார்த்தமானதாகவும் இருப்பதை என்னால் உணர முடிக்கின்றது. முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக மொனராகலை மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 150 வீடுகளை அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. மொத்தமாக 750 வீடுகளை இங்கே அமைக்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாகவும் திலகராஜ் தெரிவக்கின்றார். இப்போது ஆட்சி மாறினாலும் இந்திய அரசாங்க உதவி என்றவகையில் எஞ்சிய 600 வீடுகளையும் மொனராகலை மாவட்ட தோட்டப் பகுதி மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தநாட்களில் அவர் மொனராகலை மாவட்டத்தின் கந்தஹேன, தென்னக்கும்புர, மரகல, பாலாறு, குமாரவத்தை, கும்புக்கன போன்ற தோட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் எனதும் வெற்றிக்காக தொலைபேசி சின்னத்தின்காக பிரச்சாரங்களை செய்துவருகிறார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவர் என்ற வகையில் நான் அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். பாராளுமன்றத்தில் என்னோடு பல குழுக்களில் பணியாற்றிய அவர் தனது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் அதே வேளை நாட்டு நலனிலும் அதிக அக்கறையுடன் செயல்படுபவர் என்பதை நான் நன்கறிவேன்.
நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்துக்கும் சமவாய்ப்பு வழங்கி கௌரவ சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி சகல இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் பயணத்தையே முன்னைடுத்துச் செல்லும்.
எமது நல்லெண்ணத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கும் எனது விருப்பு இலக்கம் 2 க்கும் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்