காலம் தொடர்ந்தும் வாய்ப்பு தராது இரா. சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருகோணமலையில் இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இது தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு தொடர்ந்து 20 வருடகாலமாக ஒருவரையே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இம்முறை தேர்தலின் போது ஒரு மாற்று நபரை தெரிவு செய்ய பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர் கேட்டுக்கொள்வதாக அரசியல் ஆய்வாளரும் திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:
அரசியலால் ஒரு சமூகத்தை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியுமென்று ஒரு கூற்றுண்டு. அந்த ஆக்கமும் அழிவும் மக்களின் தீர்மானங்களிலேயே தங்கியிருக்கின்றது. சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, அரசியல் ஆக்கத்திற்கு துனைபுரியும் - தீர்மானங்கள் தவறாக இருந்தால், அது அழிவிற்கே வழிவகுக்கும். ஆக்கமா – அழிவா? முடிவு மக்களிடம். திருகோணமலை தமிழ் மக்கள் எத்தகைய முடிவையும் எடுக்கலாம். ஆனால் சமூகத்தையும், அந்த சமூகத்தை நிமிர்த்தும் அரசியலையும் நேசிப்பவர்கள் என்ற வகையில், சில விடயங்களை கூறவேண்டியது எமது கடப்பாடாகும். சரியான வேளையில், சரியான விடயங்களை கூறாமல் இருப்பதும் கூட, ஒரு சமூக விரோத செயலாகும். நாம் முடிந்தவரையில் சமூக பொறுப்புள்ளவர்களாக இருக்க முயற்சிக்கின்றோம். அவ்வாறானதொரு பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு திருகோணமலை வாக்காளருக்கும் இருக்கின்றது என்றே நாம் நம்புகின்றோம். ஜனநாயகம் என்பது வெறும் சொல் அல்ல. அது, மக்கள் தங்களின் எதிர்காலத்தை தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ளுவதற்கான ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த ஜனநாயகம் மக்களுக்குப் பயன்படும். இல்லாவிட்டால் அது மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.
திருகோணமலை தமிழ் அரசியல் செல்நெறி ஒரு சரியான ஜனநாயக தளத்தில் பயணிக்கின்றதா என்னும் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். தனிநபர் சர்வாதிகாரம், உட்கட்சி ஜனநாயகமின்மை, மக்களை அறிவற்றவர்களாக கருதுவது - இப்படியான பல்வேறு விடயங்களால் திருகோணமலை தமிழ் அரசியல் சீரழிந்துகொண்டிருப்பது தொடர்பில் நாம் கரிசனைகொள்ளாமல் இருக்க முடியாது. இந்தப்பின்னணியில் 43 வருடங்களாக அரசியலில் இருப்பவரும், தொடர்ந்தும் 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மீண்;டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாம் கரிசனைகொள்ள வேண்டியிருக்கின்றது. 1977இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவான திரு.இரா.சம்பந்தன், அதன் பின்னர் 2001இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு, மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரால் வெற்றிபெறமுடியவில்லை. 1997இல், அப்போது திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, மீண்டும் திரு.இரா.சம்பந்தர் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது. இருந்தபோதிலும் 2000இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துவிடலாம் என்னும் அச்சத்தால் அவர் போட்டியிடவில்லை. 2001இல், பாராளுமன்றத்திற்கு தெரிவான இரா.சம்பந்தர் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் - அதாவது 20 வருடங்களாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார். 20 வருடங்கள் என்பது ஒரு சாதாரண காலமல்ல. இன்று உடல்ரீதியிலும் மனரீதியிலும் தளர்ந்திருக்கும், 88 வயதான திரு.இரா.சம்பந்தனால் இதற்கு மேலும் எதைச் சாதித்துவிட முடியும்?
தமிழ்த் தேசிய அரசியல் பயணம் என்பது மிகவும் கரடுமுரடானது. அது சவால்கள் நிறைந்தது. இதன் காரணமாகவே, தமிழரசு கட்சியை உருவாக்கிய தந்தை செல்வநாயகம் அவர்கள், கட்சியின் அங்குரார்ப்பன கூட்டத்தின் போது, இளைய தலைமுறையை நோக்கி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “நாங்கள் ஒரு இலக்கு நோக்கி பயணிக்கின்றோம் எல்லாம் வல்ல கடவுள் எங்களுக்கு துணைபுரிவார் என்று நாங்கள் நம்புகின்றோம். ஒரு வேளை நாங்கள் எங்களின் இலக்கில் தோல்வியடைந்தால், நமது இளைய தலைமுறையினர் எங்கள் பதைகைகளை சுமந்துசெல்வர்”. உண்மையில் தமிழ்த் தேசிய அரசியல் என்பது ஒரு அஞ்சலோட்டம் போன்றது. இதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் பங்களித்திருக்கின்றனர். திரு.இரா.சம்பந்தனும், தன்னால் முடிந்தவரையில் சில பங்களிப்புக்களை வழங்கமுயற்சித்திருக்கின்றார். ஆனாலும் அவரது காலத்தில் திருகோணமலை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.
2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு முற்றிலுமாக அவர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் சுகமான பல சலுகைகளும் கிடைத்தன. ஆனால் வாக்களித்த மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீரவில்லை. புதிய அரசியல் யாப்பென்னும் நடக்கமுடியாத, வெற்றுக் கோசமொன்றுடன் ஜந்துவருடங்கள் வீணாகிப்போனது. இந்தக் காலத்தில், ஆகக் குறைந்தது திருகோணமலை தமிழ் மக்களின் அடிப்படையான பொருளாதார பிரச்சினைகளைக் கூட அவரால் தீர்க்க முடியவில்லை. இத்தனைக்கும் திருகோணமலையில் எம்மிடம், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் ஆட்சிமாற்றத்தை முஸ்லிம் தலைவர்கள் மிக உச்சளவில் பயன்படுத்தி, தங்களின் சமூகத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டனர். எனவே இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி - கடந்த ஜந்து வருடங்களில் அரசாங்கத்தோடு இணைந்திருந்து, செய்ய முடியாமல் போனதை, தள்ளாத வயதில் தடுமாறும் இரா.சம்பந்தரால் எவ்வாறு செய்ய முடியும்? இவ்வாறானதொரு சூழலில், திருகோணமலை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாம் ஏன் பிறிதொருவரிடம் ஒப்படைத்து, நமது திருகோணமலை தமிழ் அரசியலை பலப்படுத்த முடியாது? வாழ்நாள் முழுவதும் ஒருவர் மட்டும்தான் நாடாளுமன்றம் செல்லவேண்டுமென்னும் ஏதும் எழுதப்படாத தமிழ்விதியுண்டா? இது தொடர்பில் திருகோணமலை தமிழ் மக்களாகி நீங்கள் சிந்தித்து முடிவெடுப்பதற்கான அவகாசம் இப்போதும் உண்டு.
மூத்த தலைவர்கள் என்போர், இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரனமாக நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த ஜனநாயக அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்க முடியும். உலகெல்லாம் சென்று, ஜனநாயகத்தை கோரும் நாம் - எமக்குள் ஜனநாயகத்தை பேணிப் பாதுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். எமக்குள் ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் தவறுவோமாயின் அதனை எவ்வாறு நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும்?
திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாகவும் அக்கறையாகவும் இருக்கின்றோம். அதற்காக எங்களால் முடிந்த அத்தனையும் செய்வோம். சம்பந்தன் ஜயாவின் வயதையும் அவரது உடல்நிலையையும் கருத்தில்கொண்டு, அவருக்கான ஓய்வை கொடுக்கவேண்டியதும் எமது கடமையாகும். அதற்கான வேளை கனிந்துவிட்டது. இனியும் நாம் அதில் தாமதிக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அல்லது தமிழ்த் தேசியத்தில் உறுதியாக நிற்கும் ஏனைய ஏதோவொரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், நாம் எமது திருகோணமலை தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும். திருகோணமலை தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் என்பதை நாமறிவோம். அந்த தமிழ் உணர்வில் தவறில்லை. எனவே தமிழரசு கட்சியில் இருக்கும் ஒரு புதியவருக்கு வாய்ப்பை வழங்குவதன் மூலம் நமது தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும். இன்று என்றுமில்லாதவாறு தென்னிலங்கை கட்சிகளும், எண்ணிலடங்கா சுயேற்சைக் குழுக்களும் தமிழ் வாக்குகளை சிதறடிக்க முற்படுகின்றன. வாக்குகளை கேட்பது கட்சிகளின் உரிமை ஆனால் ஒரு முறைக்கு, பல முறை சிந்தித்து, தமது வாக்குகளை சரியானவர்களுக்கும், சரியான கட்சிகளுக்கும் வழங்கவேண்டியது மக்களின் உரிமை. கூட்டமைப்பின் தவறுகளால் நமது இளைய தலைமுறை திசைமாறிச் செல்லும் நிலைமை உருவாகியிருக்கின்றது. அவர்களை நோக்கியும் நாம் ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். கடந்தகாலத்தின் தவறுளை புறம்தள்ளி, எதிர்காலம் நோக்கி சிந்தியுங்கள். உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் மிகவும் பெறுமதியானவை. அதனை பயன்படுத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் சரியாக பயன்படுத்துங்கள். வீணாக்கிவிடாதீர்கள். தமிழ் மக்கள் எல்லோரையும் வாக்களிக்கத் தூண்டுகள். அனைவரும் வாக்களிப்பது மிகவும் அவசியமானது.
தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு மாற்றங்களை வேண்டிநிற்கின்றது. மாற்றம் தொடர்பில் தமிழர் தேசமெங்கும் ஒளிக்கீற்றுகள் தெரிகின்றன. இதில் நாமும் ஒரு அங்கமாவோம். நாம் நமது பொறுப்பை உணர்ந்து செயற்படாவிட்டால், நாளைய வரலாறு திருகோணமலை தமிழ் மக்கள் மீது பழிச்சொற்களை வீசும். நமது நாளைய தலைமுறை குற்றவுணர்வுடன் வாழநேரிடலாம். எனவே திருகோணமலை தமிழ் மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டிய வேளை வந்திருக்கின்றது. காலம் வாய்ப்புக்களை தொடர்ந்தும் தராது என்பதை உணருங்கள்.
0 comments :
Post a Comment