‘கொவிட் – 19’ வைரஸ் தாக்கத்தையடுத்து பாரியளவு மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகள்தோறும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார்.
மலையகத்தின் மூத்த தொழிற்சங்க வாதிகளுள் ஒருவரான அமரர் கே. வேலாயுதம் ஐயாவின் மகன் என்பதால் மக்கள் மத்தியில் தினேஷ் குமாருக்கான ஆதரவும் அதிகரித்துவருகின்றது.
மக்கள் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட வேட்பாளர் தினேஷ் குமார்,
” எமக்கு தேர்தலைவிடவும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். அதுமட்டுமல்ல வேலைநேரங்களில் கூட்டத்துக்கு அழைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தடையேற்படுத்தக்கூடாது என்பதும் எனது நோக்கமாகும். இதன்காரணமாகவே நீங்கள் வீடுகளில் இருக்கும்நேரம் பார்த்த, வந்து பிரச்சாரம் செய்கின்றேன்.
வேலைநேரங்களில் உங்களுக்கு வழங்கப்படும் இடைவெளியிலும்கூட சந்திக்கின்றேன்.
வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் இருந்த மலையகம் அல்ல இன்று. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அன்றுபோல் இன்றும் மலையக மக்கள் வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது இளைஞர்கள் பல்துறைகளிலும் சாதனைப்படைத்துவருகின்றனர்.
அண்மையில்கூட மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக பதவியேற்றனர்.
ஆக கைகட்டி வாழ்ந்த யுகம் முடிவடைந்துவிட்டது. தலைநிமிர்ந்து வாழும் யுகம் பிறக்கும். அதனை அடைவதே எமது நோக்கம். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.” – என்றார்.