மூன்று தசாப்த்தங்களுக்கும் அதிகமாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ளத் தவறிய புத்தள மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு இந்தத் தேர்தலில் தராசு சின்னத்தினூடாக வெற்றி நிச்சயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில்; தராசு சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் நகரில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலுக்கும் பிறகு ஏதோவொரு வகையில் சந்தர்ப்பங்களுக்கேற்ப பலவிதமான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. முன்கூட்டியே ஒரு சிலர் சுயலாப நோக்கங்களுக்காக தேவையில்லாத கதையாடல்களை கொண்டு வந்து எங்களுடைய அணிக்குள் ஒற்றுமை இல்லை என்ற பார்வையை ஏற்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும். இது மாமுல் அரசியலுடைய ஓர் அங்கம் என்ற காரணத்தினால் சில விடயங்களில் தலைமை வேண்டுமென்றே போய் மூக்கை நுழைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், கட்சிக்குள் இன்னொருவரின் தூண்டுதலினால் தலையாட்டி பொம்மையாக செயற்படுகின்ற தலைமை நான் அல்ல.
நான் அமைச்சராக இருந்த காலத்தில் நுரைச்சோலைக்கு அண்மையில் பெரியதொரு பூங்காவிற்கு 2கோடி, 72 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து கொடுத்த வேலைத்திட்டம் இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புத்தளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் வேண்டுமென்றே சில இழுத்தடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதை இப்பொழுது தான் அறிந்தேன்.
எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சிலரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் இந்த இயக்கத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றார்கள். கட்சிக்குள் அரசியல் ரீதியான முரண்பாடுகள் தோன்றுவது உயிரோட்டமுள்ள கட்சியொன்றில் சாதாரணமாக நிகழ்வதாகும். அதில் ஒவ்வொருவருடைய இயல்புகளுக்கேற்ப பிரச்சினைகளும் பூதாகரமாக வெடிக்கும். அவற்றை சரிசெய்து கொண்டு இந்த இயக்கத்தை வழிநடத்தி செல்கின்ற எனக்கு இவற்றை முகாமை செய்கின்ற பொறுப்பில் வேலைப்பழு காரணமாக தாமதம் ஏற்பட்டாலும் கூட, பொது வெளியில் அது கட்சியை சங்கடத்துக்குள்ளாக்குவதாக ஆகிவிடும்.
இந்த வெற்றியின் பிற்பாடு முஸ்லிம்களின் பாராளுமன்ற ஆசனங்களின் சமன்பாடு அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த சமூகத்திற்கு எவற்றை பெற்றுக்கொடுக்க போகின்றது என்ற விவகாரத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்தே சாதித்து காட்டவேண்டும்.
கடந்த பாராளுமன்றத்தில் அபூர்வமாக ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்தோம். இவ்விடயம் சமூகத்திற்கு பெரியதொரு ஆறுதலை அளித்தது. அந்த காரியத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னின்று நடத்தினார் என்பதில் தனியான கௌரவமும் கண்ணியமும் தலைமைக்கும் இருந்தது. இதே ஒற்றுமை புத்தளத்தில் மட்டுமல்லாது தேர்தல் காலத்தில் ஏனைய இடங்களிலும் நிலவியிருந்தால் இந்த சமூகத்தின் அரசியல் பலம் கேள்விக்குட்படுத்தப்படாமல் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
நாங்கள் இதனை அம்பாறை மாவட்டத்தில் செய்யவேண்டும் என்று ஆலோசித்தோம். இங்கு நாங்கள் ஓர் ஆசனத்திற்காக போராடுகின்றோம். ஆனால், அம்பாறையில் நான்கு ஆசனங்களை இலகுவாக வெற்றி கொண்டிருக்கலாம். இலங்கையில் எங்காவதொரு மூலையில் முஸ்லிம்களின் வாக்கு பலத்தினால் ஒரு மாவட்டம் வெற்றிகொள்ளப்படுகின்றது என்பது பலமான செய்தியொன்றை ஆட்சியாளர்களுக்குச் சொல்லும்.
ஆனால், அதை செய்வதற்கு எங்களோடு இணைந்து செயற்படுவதற்கு அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன்படவில்லை. அக்கட்சியிலிருக்கும் முக்கியஸ்த்தர்கள் தங்களுடைய தலைமை செய்த தவறை பகிரங்கமாக விமர்சிக்க தொடங்கியிருக்கின்றார்கள். அதற்கென தனியே மேடை போட்டு கதைக்கின்றார்கள். மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்ற அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மாவட்டத்தை கைப்பற்றுவதே முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை என்றவாறு பேச தலைப்பட்டிருக்கின்றார்கள்.
எங்களுக்கிடையிலுள்ள ஒற்றுமையை சில இடங்களில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகக் குலைத்துக் கொள்வது சமூகத்திற்கு மத்தியில் இன்று இருக்கின்ற ஆதங்கங்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் குந்தகம் விளைவிக்கின்ற விடயமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக மிகவும் பக்குவமாக இவ்விடயங்களை கையாண்டு வருகின்றோம்.
நாங்கள் புத்தளம் மாவட்டத்தில் எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கையை சில தேசிய கட்சிகளால் ஜீரணிக்க முடியாதுள்ளது. மாற்று அரசாங்கத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாம் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதன் தலைமை எங்களுடைய இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தால் அதனை அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
புத்தளத்தின் முழு சிவில் சமூகமும், ஆன்மீகத் தலைவர்களும் சேர்ந்து எங்களிடத்தில் முன்வைத்த கோரிக்கையிலுள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் தேசிய ரீதியில் போட்டியீடுகின்ற அணிக்கு இந்த மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட, இம்மாவட்ட மக்களின் நீண்ட கால அபிலாஷைகளுக்கு தீர்வாக நாங்கள் இந்த விலையை கொடுத்து தான் ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை மிகவும் துணிச்சலுடன் மேற்கொண்டோம்.
மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் சிலர் எனது இல்லத்திற்கு வந்து புத்தளம் சிவில் சமூக தலைமைகளோடும், புத்தள வேட்பாளர்களோடும், இணைந்திருக்கின்ற ஏனைய கட்சிகளின் முக்கியஸ்த்தர்களோடும் கூட்டாக இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடிய போது மிகத் தெளிவாக எங்களது நிலைப்பாடுகளை எடுத்துக் கூறினோம். புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது என்பதற்கான சரியான விளக்கத்தை நாம் அளித்தோம். ஆனால், அவர்கள் இதுவொரு பிழையான முன்னுதாரணமாக போய்விடும் என்று அஞ்சினார்கள்.
இந்த விடயத்தில் அவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் எல்லா இடங்களிலும் பல பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று பல காரணங்களை சொன்னார்கள். ஆனால், இங்கு விசேடமாக மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக ஆசனமொன்றை பெற முடியாமல் மக்கள் அவதிப்படுவதை அவர்களுக்கு விளக்கப்படுத்த வேண்டியிருந்தது.
அத்துடன், எங்களது இந்த முடிவு இன்றைய ஆளுத்தரப்புக்கு உள்ளுர குதூகலமாக அமைந்தது. ஏனெனில், வழமையாகவே முஸ்லிம்களின் வாக்குகள் அதிகபட்சமாக நாங்கள் தேசிய மட்டத்தில் இணைந்திருக்கின்ற தரப்புக்கு கிடைப்பது தான் வழக்கம். எனவே அந்த வாக்குகள் முஸ்லிம்கள் ஓர் அணியில் தனித்து போட்டியிடுகின்ற போது வேறெந்தக் கட்சிக்கும் கிடைக்காமல் தடுக்கப்படுவது அவர்களது வெற்றி வாய்ப்பை அதிகரித்துவிடும் என்று மகிழ்ச்சியடைந்தாலும் கூட இப்போது அவர்களுக்கு இரண்டாவது ஆசனத்தையும் புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னம் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வடபுலத்திலிருந்து வந்தவர்களும் இங்கு மிகவும் கரிசனையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் புத்தளத்தில் வாழ்கின்ற தமிழ் சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறவேண்டும். என்னவென்றால், புத்தளம் நகரத்தின் ஆட்சி எங்களுடைய கைகளில் இருக்கின்றது. புத்தளம் நகரத்திலிருந்து எங்களுக்கோரு பாராளுமன்ற ஆசனம் வெற்றிகொள்ளப்படுமாக இருந்தால், புத்தளம் நகர சபையில் வெற்றிடம் ஏற்படுமானால் நாங்கள் தமிழ் சகோதரர் ஒருவருக்கு அதனை வழங்குவோம்.
இதன் மூலம் அவர்களுக்கான குறைந்தபட்ச அபிலாஷையை வழங்குகின்ற விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பங்களிப்பை செய்வதற்கு தயாராகி கொண்டிருக்கின்றது. அதற்கு பகரமாக அவர்கள் ஏற்கனவே ஆங்காங்கே செயற்பட்டு வருவதை போல பூரண ஒத்துழைப்பை எங்களுடைய அணிக்கு தரவேண்டும். அவர்களது ஆதரவு தராசு சின்னத்திற்கு கணிசமாக இருக்குமானால், இந்தப் பிரதி உபகாரத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அடுத்த தேர்தலிலும் வெறுமனே இது முஸ்லிம்களது கூட்டணியாக மட்டுமல்லாமல், தமிழ் பேசும் மக்களது கூட்டணியாக மாறி எங்களுக்கு மேலதிக ஆசனமொன்றை தனியாக நின்று பெறுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் ஏற்படுத்தலாம். ஒரு மாகாண சபை தேர்தலில் ஏற்கனவே நாங்கள் மூன்று ஆசனங்களை பெற்று அதில் ஓர் ஆசனத்தை தமிழர் ஒருவர் பெறக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினோம். அதுபோல் எதிர்காலத்திலும் மாகாண சபை தேர்தலில் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
எனவே, தேசிய கட்சியில் எவ்வாறு எண்ணிக் கொண்டாலும், சேர்ந்து நின்றாலும், தனித்து நின்றாலும் பரீச்;சார்த்த நடவடிக்கைகள் மூலம்;; பல விதத்திலும், அந்த விடயங்களை எங்களால் சாதித்துக்கொள்ளலாம். தேர்தல் சட்டங்களில் முழுமையாக முற்றுப்பெறாத சில விவகாரங்கள் உள்ளன.
அதேபோல வடபுலத்திலும் மாகாணசபை ஆசனமொன்றை புத்தளத்திலிருந்து பெறுவதற்கான ஏற்பாடு பற்றியும் மிகவும் தீவிரமாக சிந்தித்து வருகின்றோம்.நாம் வகுக்கின்ற புதிய வியூகங்கள் எங்களுக்கு புதிய கதவுகளை திறந்துவிடும் என்ற நிலைமையை உருவாக்கி இருக்கின்றது. அடுத்த பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான இடத்தை பெற்று சமூகத்தின் விமோசனத்திற்காக போராடும். இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து கிடைக்கின்ற ஆசனங்கள் எங்களை பலப்படுத்தும் என்றார்.
0 comments :
Post a Comment