நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து மலையகத்தில் இன்று அதிகாலை முதல் கனத்தமழை பெய்து வருகின்றது.குறித்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் பலர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வட்டவளை பிரதேசத்தில் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக சுமார் 40 வீடுகளுக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின.அவர்களின் உடமைகளும் இதன்போது வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
கொட்டகலை மேபீல்ட் பகுதியில் வெள்ளநீர் புகுந்ததில் 15 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் பல விவசாய நிலங்களும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.கொட்டகலை கே.ஓ டிவிசனில் வெள்ளநீர் புகுந்ததால் குறித்த பகுதியில் 15 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியதுடன் கால்நடைகளும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை அட்டன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.செனன் பகுதியில் மண்சரிவு காரணமாக இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் அட்டன் கொழும்பு பிரதான வீதியும் தாழிறக்குத்துக்கு உள்ளாகியுள்ளது.
பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரமுறிவுகள் காரணமாக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
