“நீதி விசாரணை இன்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும்”: -வி.ஜனகன்...!


கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துச் செல்லும் இக்கட்டான இச்சூழ்நிலையில், நீதி விசாரணை இன்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன:

“இரண்டு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கங்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவித சர்வதேச நியமங்களையோ அல்லது உள்நாட்டு நியமங்களையோ மதிப்பதாகத் தெரியவில்லை. இன்றைய கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்ச நிலையைக் கவனத்தில் கொண்டு, பல ஆண்டுகளாகச் சிறைகளில் எவ்விதமான நீதித்துறை விசாரணைகள் ஏதுமின்றி வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

“இலங்கை 2008 ஆண்டில் செய்துகொண்ட மனித உரிமைகள் தொடர்பான 104 உறுதிமொழிகளில் நான்கு சிறைக் கைதிகள் தொடர்பானவை. ஆனால் இந்த நான்கில் எதையும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எந்த அரசாங்கங்களும் முறையாக கையாளவில்லை. தமிழ் தரப்புகள் 800 க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்று குறிப்பிட்டாலும், அரசாங்கம் 2012 இல் 318 கைதிகள் மாத்திரம் என்றே அறிவித்து இருந்தது. இவர்களில் ஒரு சிலரே விடுதலை செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் இன்றுவரையும் எந்தவித நீதித்துறை மேலாண்மையோ அல்லது நீதி விசாரணைகளோ இல்லாது சிறைகளில் வாடுகிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாகத் தமிழ் தரப்புகள் இவர்களுடைய விடுதலை தொடர்பில் கோரிக்கைகளை விடுத்துவருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் இந்த அரசாங்கங்கள் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.
“இன்று பாதுகாப்புத் தரப்பும் இந்தக் கொடிய கொவிட்-19 பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் சிறைக் கூடங்களிலும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே இவ்வாறு பல ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, மனிதாபிமான அடிப்படையில் இந்த அரசாங்கம் அணுக வேண்டும்.

“இன்றைய ஜனாதிபதி அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி தண்டனைகள் உறுதிப்படுத்தியவர்களைக் கூட விடுதலை செய்துள்ளார். அதுபோல், குற்றச்சாட்டுகள் இன்றி, வெறும் சந்தேகத்தின் பேரில் மாத்திரம் சிறைவாசம் அனுபவிக்கும் இந்த தமிழ் அரசியல் கைதிகளை ,குறைந்தபட்சம் பிணையிலாவது விடுதலை செய்ய, அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும்” என, கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -