மினுவாங்கொடை நிருபர்-
கொரோனா தொற்று பரவலிலிருந்து அரச மற்றும் சுகாதாரத்துறையினர் நம்மைப் பாதுகாக்கின்றார்கள்.
இந்நிலையில் நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்காகவே தொற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்கும் வை.எம்.எம்.ஏ. யின் ஊடாக பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்புச் செய்கின்றோம் என, வை.எம்.எம்.ஏ. யின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால்
கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பர பிரதேச செயலகப் பிரிவு பொது சுகாதாரப் பிரிவினர்களுக்கும், வத்தேகம பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், கொரோனா தொற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் அத்தியவசிய சேவையாளர்களுக்கும் அவர்களின் பாதுகாப்புக் கருதி, நவீன சுய பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
கண்டி மாவட்ட பணப்பாளர் பௌஸ் ஏ. காதர் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முன்னாள் தேசியத் தலைவர் சலீம்தீன், மடவளை வை.எம்.எம்.ஏ. கிளைத் தலைவர், பாத்ததும்பர பிரதேச சபை உறுப்பினர் ரியாஜ் அபூபக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்துரை வழங்கும்போது, வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என மிகப் பெரிய குழுவொன்று, கொரோனா தொற்று நோயை நமது தாய் நாட்டிலிருந்து முற்று முழுதாக அகற்றுவதற்கு, பல்வேறுபட்ட பிரயத்தனங்களை இரவு பகலாக பல்வேறு வழிகளிலும் எடுத்து வருகின்றார்கள்.
இவர்கள் அத்தனை பேரும் எங்கள் நலன் கருதி தன்னலமற்ற சேவைகளை பெரும் தியாகத்துக்கு மத்தியில் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.இத்தருணத்தில், நாம் இவர்களுக்கான கெளரவத்தையும் கண்ணியத்தையும் அவசியம் வழங்க முன்வர வேண்டும்.
இவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. இவர்கள் எம்மைப் பாதுகாப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் எம்மைப் பாதுகாக்கின்றார்கள். ஆகவே நாம் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான், நாம் இந்நோய்த் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு சிறந்த சுக தேகிகளாக வாழ முடியும்.
இதற்காகத்தான் எமது வை.எம்.எம்.ஏ. இயக்கம், கொரோனா தொற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து சேவையாளர்களுக்கும் நவீன சுய பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்புச் செய்து, இவ்வாறான நன்மையான கைங்கரியங்களில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகிறது.
எமது இயக்கத்தில் பணி புரியும் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும், நாடளாவிய ரீதியில் இயங்கும் சகல கிளை உறுப்பினர்களும் சமய, சமூக மற்றும் இதுபோன்ற பொதுப்பணிகளில் தமது நேர காலங்களை ஒதுக்கி, பொறுப்பாகவும் பொறுமையாகவும் ஈடுபட்டு வருவதையிட்டும் நான் இத்தகு சிறப்பு நிகழ்வில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனவே, எப்பொழுதும் அவதானமாக இருந்து, எங்களால் முடிந்தளவிலான பங்களிப்புக்களை இதுபோன்றவர்களுக்கு வழங்குமாறும் அன்பொழுகக் கேட்டுக் கொள்கின்றேன்.
நாம் பாதுகாப்பாகவும் தனிமையாகவும் இருந்து, கொரோனா எனும் கொடிய தொற்று நோயை அடியோடு அழித்து, நம்மையும் நமது தாய் நாட்டையும் காப்போம். சுத்தமான முறையில் சுகாதாரமான முறைகளைப் பேணி இதனை அடியோடு அழிப்போம் என்றார்.
