5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை நிறுத்தி ஏழை மக்களின் அடிவயிற்றில் அடித்துள்ள ராஜபக்ச அரசாங்கம்


" 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை நிறுத்தி ஏழை மக்களின் அடிவயிற்றில் அடித்துள்ள ராஜபக்ச அரசாங்கம்,தேர்தல் ஆணைக்குழுமீது அப்பட்டமாக பழிசுமத்திவிட்டு தாம் தப்பிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றது. எனவே, நெருக்கடியான சூழ்நிலையில்கூடு கபட அரசியல் நடத்தும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (24.05.2020) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

" கொரோனா வைரஸ் சீனாவில் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறு அரசாங்கத்திடம் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால், பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதே அவர்களின் இலக்காக இருந்தது. எமது ஆலோசனைகளை ஏற்று அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.குதிரை ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துமூடிய கதைபோல்தான் இதுவிடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் இருந்தன.

சுகாதார துறையினரும், பாதுகாப்பு தரப்புகளும் சிறப்பாக செயற்பட்டதால் பாரிய பாதிப்பில் இருந்து நாம் மீண்டுள்ளோம். ஆனால், இந்த விடயத்திலும் அரசாங்கம் தற்போது பெயர்போட்டுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றது.

குறிப்பாக தொடர் ஊடரங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்தது. இது விடயத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இருக்கவில்லை. இதன்காரணமாகவே சுற்றுநிருபத்தை பலதடவைகள் திருந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் எல்லாம் அரசியல் மயப்படுத்தப்பட்டது.

வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் மக்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினரும் கொரோனா நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு 5 அயிரம் ரூபா கிடைக்கவில்லை. கட்சி சார்பாக பகிர்ந்தளிக்கப்பட்டது. மலையகத்தில் இந்நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இதற்கு எதிராக நாம் குரல் கொடுத்ததாலேயே ஓரளவு நியாயம் கிடைத்தது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல நிதியங்களை உருவாக்கி பண வசூலிப்பில் ஈடுபட்டுவரும் அரசாங்கம், அரச ஊழியர்களின் சம்பளத்திலும் கைவைத்துள்ளது. ஆனால், ஜுன் மாதத்துக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கமையவே நிறுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் புது விளக்கம் வழங்கிவருகின்றது.

5 ஆயிரம் விவகாரத்தை அரசியல் மயப்படுத்தாமல், அரச அதிகாரிகள் ஊடாக முறையாக வழங்குமாறுதான் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தவிடயத்தை அப்படியே தலைகீழாக மாற்றி, தேர்தல் ஆணைக்குழுமீது பழிபோட்டுவிட்டு, தனது இயலாமையை மூடிமறைத்து, மக்கள் மத்தியில் அனுதாபம் தேடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. எனினும், அரசின் கபடநோக்கத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

அதேவேளை, கொரோனா ஒருபுறம், மறுபுறத்தில் சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆயிரமும் கிடைக்கவில்லை. 5 ஆயிரம் ரூபாவும் முறையாக சென்றடையவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். இதனை அரசாங்கம் செய்யவேண்டும். அதற்கான அழுத்தங்களை கொடுப்போம்." - என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -