முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்குவதற்கு உதவி செய்து தருமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் மனிதாபிமானத்திற்கான உதவும் நிறுவனம் கேட்டுக் கொள்கின்றது.
மனிதாபிமானத்திற்கான உதவும் நிறுவனத்தின் தலைவர் எம்.ஜே.பெரேஸ் மொஹமட் தலைமையில் கொலன்னாவையில் நேற்று நண்பகல் இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பத்திரிகையாளர் மாநாட்டில் தமது நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக கொலன்னாவை உள்ளிட்ட பல பகுதிகளில் எந்தவித பாகுபாடும் இன்றி மூவின மக்களுக்கும் அவசரமான நிலைமைகளில் உதவிகளை நல்கி வருவதாகவும் இதன்போது அதிகமாக பாதிக்கப்படும் மக்களை தாங்கள் இனங்கண்டு உடனுக்குடன் உதவிகளை நல்கிவருவதாகவும் பெருமளவான உதவிகளை விஹாரைகள், இந்துக் கோயில்கள், கத்தோலிக்க தேவாலயங்கள் மூலமும் உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏனைய நாடுகளைவிடவும் முன்னெச்சரிக்கையுடன் புத்திசாலித்தனமாக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இலங்கையில் கொரோனா வைரசின் பாரிய தாக்கக்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடிந்துள்ளது எனவும் அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாங்கள் பூரண ஆதரவுகளை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கொரோனா நோயினால் ஒருசில மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 2 முஸ்லிம் மரணங்களும் இடம் பெற்றுள்ளதுடன் சுகாதார நலனுக்காக அவை எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் முஸ்லிம் ஜனாஸாக்களை 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் செய்வதே எமது மார்க்கக் கடமை என்றும் இந்த வகையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை சர்வதேச சுகாதார சட்டங்களுக்கு அமைவாக ஏனைய நாடுகளில் அடக்கம் செய்வதுபோல் இலங்கையிலும் அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி முஸ்லிம் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கு உதவி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இப்பத்திரிகையாளர் மாநாட்டில் நிறுவனத்தின் செயலாளர் எம.ரி.எம்.மிகான், பொருலாளர் எம்.எப்.இல்ஹாம், பிரதித் தலைவர்களான ஏ.எம்.ஜே.எம்.ஜவ்பர், எஸ்.ரி.முராஜூடீன் ஆகியோரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
