உலகில் முதலாவது மனிதன் மரணித்த போதே பூமிக்குள் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை மனித குலத்திற்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்து விட்டான்.
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே" எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.
[அல்குர்ஆன் 5:31]
மரணித்த ஒருவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்படுவது தான் இஸ்லாமிய வழிகாட்டல் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எனவே இதில் முஸ்லிம் சமூகத்தில் எந்த கருத்து முரண்பாடுகளுமில்லை.
நிர்ப்பந்தத்தில் எரிக்கப்பட்டால்..
தற்போது உலகில் கொரோனா வைரஸால் ஏற்படும் (கோவிட் 19) நோயின் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவ்வாறு மரணிப்போரின் உடலை அடக்கம் செய்யவோ சூழலுக்கு தக்க எரிக்கவோ WHO வழிகாட்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கோவிட் 19 நோயினால் மரணித்தவர்களின் உடல் எரிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் எரிக்கப்படுகிறது.
WHO அறிக்கையின் படி புதைக்க அனுமதி இருப்பதை சுட்டிக்காட்டி அடக்கம் செய்ய அரசிடம் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளை SLTJ உட்பட பல முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் பிரமுகர்களும் மேற்கொண்டாலும் இன்னும் அதற்கான சரியான தீர்வு கிடைக்கவில்லை.
மரணித்தவர்களை குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், அடக்கம் செய்தல் போன்ற மார்க்கம் வழிகாட்டியுள்ள காரியங்களைச் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு சில நிபந்தனைகள் அடிப்படையில் தொழுகை நடத்த மட்டுமே குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இது போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலையில் எரிக்கப்படுவதால் எம்மீதோ அல்லது குறித்த ஜனாஸா மீதோ எவ்வித குற்றமும் ஆகாது.
நிர்ப்பந்தமான சூழலினால் மார்க்க நெறிகள் தவறவிடப்படப்படுமேயானால் அதனால் குற்றவாளியாக மாட்டோம் என திருக்குர்ஆன் கூறுகிறது.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
[அல்குர்ஆன் 2:286]
விரும்பிச் செல்லாமலும், வரம்பு மீறாமலும் நிர்ப்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரிலா அன்பாளன்.
(அல்குர்ஆன் 2 : 173)
எனவே அரசு விதித்துள்ள சட்டத்தின் நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் எம்மில் மரணிப்பவர்களை புதைக்க முடியாமல் போவது நம்மை அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாக்காது. அதேவேளை அவ்வாறு மரணிப்போரை புதைக்க வாய்ப்பு உண்டா என்பதை அரசிடம் கேட்டு முயற்சி செய்து நம்மை சார்ந்தாகும்.
சாம்பலை அடக்கம் செய்ய வேண்டுமா?
ஒரு முஸ்லிம் ஜனாஸா எரிக்கப்பட்டு அதன் சாம்பலை அரசு நம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அதை என்ன செய்வது என்று சிலர் கேட்கிறார்கள்.
மனிதன் எரிக்கப்பட்ட சாம்பல் என்பது இஸ்லாமிய அடிப்படையில் மதிப்பளித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
அந்த சாம்பலை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்.
பயன்பெற தகுதியற்ற பொருளை புதைப்பது வழக்கம் என்ற அடிப்படையில் அந்த சாம்பலை பூமியில் புதைப்பதை குற்றம் சொல்ல முடியாது.
குர்ஆன் சுன்னா இதை தடுக்கவில்லை என்பதால் நாமும் இதை தடைசெய்ய வேண்டியதில்லை.
அதேவேளை சாம்பலை புதைப்பதற்கென்று சிறப்பு துஆ உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களை செய்தால் அது மார்க்கத்தில் குற்றமாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு எரிக்கப்பட்ட சாம்பலை தராத போது நாம் அதை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டிய தேவையில்லை. இதை முஸ்லிம்கள் அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
நம் எண்ணங்களுக்கு கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்.
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.