இலைமறைகாயான சமூக சேவையாளர் முஸாதீக்!


பரீட் இக்பால்-
யாழ்ப்பாணம், சோனக தெருவில் மீரான் மொஹிதீன் – செய்த்தூன் ஆகிய தம்பதியினருக்கு 22-08-1953 இல் மகனாக முஸாதீக் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் யாழ் மஸ்ரஉத்தீன் பாடசாலையில் கற்றார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், அதே பாடசாலையில் ஆய்வுகூட உதவியாளராக கடமையாற்றினார். மன்னாரில் அரசாங்க அதிபராக இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டு இறையடி சேர்ந்த எம்.எம். மக்பூல் அவர்களின் இளைய சகோதரரே முஸாதீக் ஆவார்.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, அவரும் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி மல்வானை அல்-முபாரக் மத்திய கல்லூரியிலும் தொடர்ந்து கொழும்பு ஹமீட் அல்-ஹுஸைனி பாடசாலையிலும் தொடர்ந்து பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி போன்ற பிரபல்யமான பாடசாலைகளில் ஆய்வுகூட உதவியாளராக நியமனம் பெற்ற இவர் அதிபர்களின் விருப்பத்திற்கு இணங்க ஆசிரியராகவும் கடமையாற்றினார். தற்போது தனது அறுபதாவது வயதில் 36 வருடங்கள் சேவையாற்றி இளைப்பாறியுள்ளார்.

முஸாதீக் ஆசிரியர் அவர்கள் யாழ் சோனக தெருவைச் சேர்ந்த சிந்தா பேகம் என்பவரை திருமணம் செய்து றிஸ்மி, ரிஸ்னா, அப்துல் முஜீப் ஆகிய முத்தான பிள்ளைகளை பெற்றெடுத்தார்.

கல்வி பயிலும் காலங்களில் பாடசாலை உதைப் பந்தாட்ட அணியிலும் சம்சுன் விளையாட்டுக் கழக அணியிலும் சிறந்து விளங்கிய இவர் பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் விளையாட்டு கழகங்களும் இணைந்து ஒரே அணியாக “யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம்” என இயங்கிய போது அதிலும் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு சிறந்த முன்வரிசை வீரராக விளங்கி பல வெற்றிகளுக்கும் வளர்ச்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
மர்ஹூம் எம்.எஸ். அமானுல்லாஹ் ஆசிரியர் அவர்களின் இல்லத்தில் 1986 ஆம் ஆண்டு நடந்த கழக பொதுச் சபை கூட்டத்தில் அக்கழகத்தின் தலைவராக இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 1990 ஆம் ஆண்டு யாழ் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்படும் வரை இவர், தலைவராக இருந்து சிறந்த முறையில் நெறிப்படுத்தி வந்தார்.

முஸாதீக் ஆசிரியர் அவர்கள் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்ல ஒரு சிறந்த உதைப் பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் இருந்து பாடசாலை அணியையும் கழக அணியையும் ஒழுங்கான முறையில் நெறிப்படுத்தியதுடன் யாழ்ப்பாண பாடசாலைகள் நடுவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து உதைப் பந்தாட்ட நடுவராகவும் கடமையாற்றினார்.

தற்போது நீர்கொழும்பில் வசிக்கும் இவர், பலவத்துறையில் ஏ.எச். மன்ஸூர், ஏ. ஸலாம், ஷபீக் காக்கா, சின்ன ராசா போன்ற நண்பர்களுடன் இணைந்து, இடம்பெயர்ந்து வந்த மக்களுக்காக இயங்கும் யாழ் முஸ்லிம் அகதிகள் சங்கத்தின் செயலாளராக தன்னை இணைத்து அம்மக்களுக்காக பல நிறுவனங்கள் மூலமும் தனவந்தர்கள் மூலமும் பல உதவிகளைப் பெற்று உதவியதுடன் நோன்பு காலங்களில் விஷேடமாக அம்மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி அம்மக்களின் கஷ்ட, துன்பங்களில் பங்கெடுத்ததன் பின்னர், நீர்கொழும்பு பெரியமுல்லைக்கு குடியேறினார்.
நீர்கொழும்பு பெரியமுல்லையில் இயங்கிவரும் “sedo” அமைப்பில் தன்னை ஓர் அங்கத்தவராக இணைத்துக் கொண்டு அவ் அமைப்பால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்.

கிராம சேவகர் ஜனாப் எம்.எஸ். ஜினூஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட “யாழ் சின்னப் பள்ளிவாசல் புனர்நிர்மாணக் குழு” வில் தலைவராக இருந்து, பள்ளிவாசலின் மீள் கட்டுமானத்திற்கு தலைமை தாங்கி இப்பள்ளிவாசலின் புதிய தோற்றத்திற்கு கடுமையாக உதவினார். இப்பள்ளிவாசல் பரிபாலன சபை அங்கத்தவராக இயங்கும் இவர் தன்னை முழுமையாக தஃவா பணியிலும் ஈடுபடுத்தி வருகிறார். முஸாதீக் ஆசிரியரின் பணிகள் தொடர வல்ல நாயன் துணை புரிவானாக ஆமீன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -