நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணக் கொடுப்பனவு, உயிரையும் பொருட்படுத்தாது வேலைத் தளத்துக்குச் சென்று வேலை செய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை. மாதாந்தம் 9 ஆயிரம் ரூபாவுக்கு மூன்று தடவைகள் வழங்கப்பட வேண்டிய உலர் உணவுப் பொருள் விநியோகம் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக அவர்கள் பாதுகாப்பான முறையில் வீட்டில் இருந்து கொண்டே அவர்களின் கடமையை செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அவ்வாறு வீட்டில் இருந்து தமது வேலைகளைச் செய்ய முடியாது. அவர்கள் வெயிலையும் மழையையும் கொரோனாவையும் பொருட்படுத்தாது வேலைத் தளத்துக்குச் சென்றுதான் தமது பணிகளை மேற்கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
இருந்தும் அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதாக இல்லை. நிவாரணம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள சுற்று நிருபங்களும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. அரசாங்க, தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே நிவாரணம் பெறும் போது, வீட்டுக்கு வெளியே சென்று தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஏமாற்றத்தையே எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். சமுர்த்தி உதவி பெறாதோர், வேலை செய்யாத குடும்பத்தில் உள்ளோர், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோர் என அரசாங்கத்தின் நிவாரண உதவி பெறுவதற்கு வரையறை செய்யப்பட்டுள்ளது. சுற்று நிருபத்துக்கு அமைய கிராம மற்றும் நகர்ப்புறங்களைச் சார்ந்தவர்கள் 5000 ரூபா நிவாரணம் பெற்று வருகின்றார்கள்.
இருந்தும் பெருந்தோட்டப் பகுதிகளில் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்களின் அழுத்தங்கள் காரணமாக உண்மையில் நிவாரணம் கிடைக்க வேண்டிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். பல இடங்களில் வசதி படைத்தவர்களுக்கு நிவாரணம் கிடைத்தும், வறுமையில் வாடும் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு, தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 9 ஆயிரம் ரூபாவுக்கு கடன் அடிப்படையில் அத்தியாவசியப் நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அரசாங்கம் 50 வீதம், நிதியையும், கம்பனிகள் 50 வீதம் நிதியையும் வழங்கி கொள்வனவு செய்யும் அத்தியாவசியப் பொருட்களை கடன் அடிப்படையில் மாதாந்தம் மூன்று தடவைகள் அதாவது 10 நாட்களுக்கு ஒரு தரம் வழங்குவதெனவும், இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒரு தடவைக்கு 3 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
இருந்தும் ஒரு தடவை மாத்திரமே வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு கட்ட நிவாரணப் பொருட்களும் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாட்டில் எத்தகைய இக்கட்டான நெருக்கடி நிலை ஏற்பட்டாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எந்த விதமான நிவாரணமும் இன்றி தமது சொந்த உழைப்பின் மூலமே வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதேநேரம், அத்தியாவசியத் துறைகள் அனைத்தும் முடங்கியுள்ள கால கட்டத்தில் பெருந்தோட்டத் துறை மாத்திரமே முடங்காமல் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறையாக தொடர்ந்து இயங்கி வருகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வாக்குறுதி வழங்கியிருந்தும், கொரோனா காரணமாக தற்போது சம்பள உயர்வு வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்து வருகின்றார்கள்.
தை பிறந்து, சித்திரைப் புத்தாண்டும் பிறந்து மாதங்கள் ஓடிக் கொண்டுள்ளன. ஆனால், 1000 ரூபா சம்பள உயர்வும் கிடைக்காமல், 5000 ரூபா நிவாரணமும் கிடைக்காமல் தொடர்ந்தும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். எனவே, அவர்களுக்கு சம்பள உயர்வை அல்லது நிவாரண உதவியை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.