கொரோனா வைரஸ் தீவிரவமாக பரவிவரும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டி தீர்மானங்களை எடுக்குமாறு எதிர்கட்சிகளின் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுவருகின்ற கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்தக் கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்கிற எதிரணியினரது கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவளித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் ஸ்ரீலங்காவில் கடந்த ஒருவாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பொதுமக்களிடையே இந்த வைரஸ் பரவும் வேகத்தை விடவும், படையினரிடையே இந்த தொற்று தீவிரமாகப் பரவிவருகின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையை அவசர நிலையாகக் கருதி கலைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தைக் கூட்டி தீர்மானங்களை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என எதிர்கட்சிகளின் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அதன் பங்காளிக் கட்சிகளும் கடுமையாக தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி தவிர்ந்த எதிர்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்ததோடு கடிதமொன்றையும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
எனினும் இந்தக் கடிதத்திற்கும் அரச தலைவர் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையிலேயே முன்னாள் சபாநாயகரான கரு ஜயசூரிய, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எதிர்கட்சிகளின் யோசனையை ஆதரித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எதிர்கட்சிகள் உரிய நேரத்தில் நல்லெண்ணத்துடன் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், கலைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இந்தக் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின் அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரது பொறுப்பாகும் என்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.