கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தினால் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலபிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்கள் 575 இற்கு உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பில் இயங்கிவரும் லிப்ட் தன்னார்வுத் தொண்டு நிறுவனம் பிரித்தானியாவில் இயங்கி வரும் மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் நிதியுதவியுடன் வழங்கிவைக்க முன்வந்துள்ளது.
சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் வைத்து இன்று (16) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிவாரண பொருட்களை செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 200 குடும்பங்களுக்கும், பட்டிப்பளை, வாகரை, வாழைச்சேனை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 100 குடும்பங்கள் வீதமும், மன்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 75 குடும்பங்களுக்குமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிவாரணப்பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வாழ்வாதாரமிழந்த மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்; திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், லிப்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி. ஜானு முரலிதரன், அமைப்பின் பொருலாளர் தர்சினி சுபாஸ்கரன், வெளிக்கள இணைப்பாளர் எம். தயானிதி உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.