தவறினால் 5நாட்களுள் சபைநடவடிக்கைகளை முடக்கவேண்டிநேரிடும்.
காரைதீவு பிரதேசசபை விசேட கொரோனாஅமர்வில் ஏகோபித்தகண்டனத்தீர்மானம்.
காரைதீவு நிருபர் சகா-நாட்டில் நிலவும் கொரோனா அவசரகாலநிலையில் எமது பிரதேசசபையின் கொரோனா விசேடசெயலணிக்குழுவின் தீர்மானங்களை அனுசரிக்காத சுகாதாரவைத்தியஅதிகாரியின் அசண்டையீனமான போக்கு காரைதீவில் கொரோனாத்தொற்று ஏற்பட வழிவகுக்கலாம் என்று அஞ்சுகிறோம். எனவே அவரை இடமாற்றி அவருக்கெதிராக எதிர்வரும் 5நாட்களுள் நடவடிக்கை எடுக்காவிடில் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடக்கம் சபையின் சகல செயற்பாடுகளையும் முடக்கவேண்டிநேரிடும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் விசேட கொரோனா அமர்வில் ஏகோபித்த கண்டனத்தீர்மானம் நிறேவேற்றப்பட்டுள்ளது.
பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இவ்விசேட கொரோனா விசேட அமர்வு நேற்று சபையில் நடைபெற்றது.
அங்கு காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரியின சபையைமதியாத அசண்டையீனமான போக்குகளை சகல உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி காரசாரமாக உரையாற்றியதோடு கண்டனத்தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
இக்கண்டனத்தீர்மானங்களை ஜனாதிபதி பிரதமர் சுகாதாரஅமைச்சர் ஜனாதிபதிகொரோனா விசேடசெயலணிக்குழு கிழக்கு ஆளுநர் மாகாணஉள்ளுராட்சி ஆணையாளர் மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உதவிஉள்ளுராட்சிஆணையாளர் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் ஆகியோருக்கு அவசரமாக அனுப்பிவைத்துள்ளனர்.
சுகாதாரவைத்திய அதிகாரியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளைக்கணடித்து உள்ளுர் வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பைத்தெரிவித்துடன் நேற்று சபை அமர்வின்போது பார்வையாளர்களாகக்கலந்துகொண்டனர்.
அங்கு உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் பிரேரணையை முன்மொழிகையில்.
காரைதீவு பிரதேசத்தின் மக்களை பாதுகாப்பதற்கு தவறிய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி உடன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் பிரதேச செயலகம் காரைதீவு பிரதேச சபையுடன் இணைந்து செயற்படாதுவிட்டால் எதிர்வரும் ஐந்து தினங்களினுள் சபையின் சுகாதார செயற்பாட்டினையும் இடைநிறுத்தி பிரதேச செயலகத்திடம் திண்மக்கழிவகற்றல் செற்பாட்டினை கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும்இ கண்டன தீர்மானமாகவும் நிறைவேற்றவேண்டும்.
உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் பிரேரணையை முன்வைக்கையில்
காரைதீவு பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளை அரசியல்வாதிகள் என புறம்தள்ளும் செயற்பாட்டினை முப்படைகள், பொலிஸ் திணைக்களம், பிரதேச செயலகம், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய அனைத்து திணைக்களங்களும் செயற்படுவதனை தவிர்த்து மக்களுக்கான சேவையினை நாம் வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை முன்வைப்பதான தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.
உறுப்பினர் த.மோகனதாஸ் பிரேரணையை முன்மொழிகையில்;
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட தினத்தில் காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்தைக்கு களுதாவளை பிரதேசத்திலிருந்து மரக்கறி விற்பனைக்காக வந்த வியாபாரியினை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறி வியாபாரத்தில் ஈடுபடாது தடுத்து நிறுத்திய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் குருநாகல் பிரதேசத்திலிருந்து வந்த கோழி விற்பனையாளருக்கு அனுமதி வழங்கிய அவரது செயலினை வன்மையாக கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.
உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் பிரேரிக்கையில்
கொரோனாவினை தடுக்கும் செயற்திட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பாக எமது சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு சபையினால் வியாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தினை ஏற்றுக்கொண்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அதனை மீறிய அவரது செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன்.
உறுப்பினர் மு.காண்டீபன் பிரேரிக்கையில்
ஊரடங்கு சட்டத்தின் போது சபையின் அனுமதியினை பெற்று வியாபாரத்தினை மேற்கொண்ட வியாபாரிகளை மீன் வியாபாரம் மேற்கொள்ளாது தடுத்து வியார அனுமதியினை வழங்குவதற்கு பிரதேச சபைக்கு எவ்வித அதிகாரமுமில்லை என அநாகரிகமான வார்த்தைகள் மூலம் அவர்களிடம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பேசியதுடன் மக்களின் தேவையினை பூர்த்தி செய்வதற்கு இடையூறு விளைவித்த அவரது செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன்.
உறுப்பினர் த.மோகனதாஸ் பிரேரிக்கையில்
ஊரடங்கு சட்டத்தின் நீக்கப்பட்ட தினத்தில் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்திற்கு அனுமதியினை வழங்கிய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி, அவர்களுக்கான ஆலோசனைகள் எதனையும் வழங்காது, திருமண நிகழ்வு இடம்பெற்ற வேளையில் உரிய வீட்டிற்கு சென்று அங்கு இந்துமதத்தின் ஆகம ரீதியான மங்கள நிகழ்விற்காக கட்டப்பட்டிருந்த வாழைமரத்தினை வெட்டி எமது இந்து மதத்தின் கடமைக்கு இடையூறினை ஏற்படுத்திய அவரது செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன்.
உறுப்பினர் மு.காண்டீபன் மேலும் உரையாற்றுகையில்
கொரோனாவினை தடுக்கும் செயற்திட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பாக எமது சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு முப்படையினர் பொலிஸ் அதிகாரி மற்றும் சுகாதாரவைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட வைத்திய அதிகாரி ஆகியோரால் முட்டை வியாபாரம் மேற்கொள்ளும் போது தொற்று ஏற்படும் என்பதனால் அதற்கு அனுமதி வழங்கப்படகூடாதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் குருநாகலில் இருந்து வந்த இரு கோழி வியாபாரிகளுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அனுமதியினை வழங்கியுள்ளார். இதனால் எமது மக்களுக்கு நோய்தொற்று ஏற்படுத்தகூடிய வகையில் நடந்துகொள்ளும் தன்னிச்சையான இவரது செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன்.
உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் பேசுகையில்.
காரைதீவு பிரதேச சபையில் 02.04.2020ம் திகதிய இன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியினை எம்மால் அழைக்கப்பட்டிருந்தது. அக் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்காத அவரது அலட்சிய செயற்பாட்டினை கண்டிக்கிறேன். காரைதீவு பிரதேச சபையின் அதிகாரங்கள் அனைத்தினையும் பிதேச செயலகம் அரச அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க எடுத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு பிரதேச சபையினை புறம்தள்ளும்வகையில் இடம்பெற்ற செற்பாட்னை கண்டன தீர்மானமாக முன்மொழிகிறேன்.
உறுப்பினர் த.மோகனதாஸ் மேலும் பேசுகையில்
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட தினத்தில் காரைதீவு பிரதேசத்தின் சில இடங்களில் மக்கள் கூட்டமாக செயற்படுவதை தடுக்கும் வகையில் சந்தைகளை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவ் இங்களுக்கு வந்து ஆலோசனைகளை வழங்குமாறு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியினை எம்மால் அழைக்கப்பட்டிந்தது. அவ் இடத்திற்கும் சமூகமளிக்காத அவரது அலட்சிய செயற்பாட்டினை கண்டிக்கிறேன்.
உறுப்பினர் மு.காண்டீபன் பிரேரிக்கையில்
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட தினத்தில் காரைதீவு பிரதேச சபையின் அனுமதியுடன் இயங்கிவரும் இறைச்சிகடைகளில் சுத்தமான முறையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில்இ கொரோனா தொற்றுக்குள்ளான பிரதேசமான குருநாகல் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கோழிகளை விற்பனை செய்வதற்கு அவ் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கிய அவரது செயலினை வன்மையாக கண்டிக்கிறேன்.
உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் மேலும்பேசுகையில்..
காரைதீவு பிரதேசத்தினுள் வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்ற வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என சபையில் இடம்பெற்ற கந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட விடயத்திற்கமைய எமது பிரதேசத்திற்பட்ட அனைத்து மீன் வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். அல்லது இதனை இடைநிறுவத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களத்திற்கு தெரியப்படுத்துவதாக தீர்மானித்தல்.
உறுப்பினர் த.மோகனதாஸ் பிரேரிக்கையில்.
கொரோனாவினை தடுக்கும் செயற்திட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பாக பிரதேச சபையினை ஆலோசனைகளை பெறாது சபைக்குரிய அதிகாரத்தினை நிராகரிக்கும் வகையில் மாவட்ட செயலாளரினால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இங்கு முன்மொழியப்பட்ட அனைத்து கண்டனத்தீர்மானங்களும் ஏகமனதாக நிறேவேற்றப்பட்டன.

