அரசாங்க நடைமுறைகளைப் பரிசீலிக்குமாறு கோரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன;
ஊரடங்குச் சட்ட நடைமுறை இரண்டாவது மாதமாக கொழும்பு, கம்பஹா, கழுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தொடருகின்றது. இதனால் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் (வத்தைகள்) வாழுகின்ற நாளாந்த வருமானம் பெறும் வறிய மக்கள், மிகப் பெரிய நெருக்கடிகளுக்கு இந்த இரண்டாவது மாதத்தில் முகம்கொடுத்து வருகின்றார்கள். இவர்களின் நாளாந்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அரசாங்கத்தின் வருமான மூலகங்கள் தடைப்பட்டு இருந்தாலும் சர்வதேசத்தில் இருந்து பெற்றுக்கொண்டுள்ள நிதிவழங்கல் இதற்கான ஒரு தீர்வாக அமைகின்றது. இன்று நாம் உலக வங்கியிடம் இருந்து 128.8 மில்லியன் அமரிக்க டொலர்களையும் 22 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய யூனியனிடம் இருந்தும் ஜப்பானிடம் இருந்து 1.2 மில்லியன் அமரிக்க டொலர்களையும் பெற்றுள்ளோம். மேலும் சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமரிக்க டொலர்களையும் பெற்றுள்ளோம். இந்தியாவிடம் இருந்து 450 மில்லியன் அமரிக்க டொலர்களையும் பெற இருக்கிறோம். அவ்வாறு பார்க்கும் போது சுமார் 2 இலட்சம் மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியில் பெற்றுள்ளோம். இதனைப் பயன்படுத்தி இல்ங்கையில் வாழும் குறைவருமானம் பெறும் 25 இலட்சம் மக்களுக்கும் 17 இலட்சம் நாளாந்த வருமானம் பெறுபவர்களுக்கும் நான்கு மாதங்களுக்கு மேல் உதவி வழங்க முடியும்.
ஆனால் இன்று குறைவருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்ப சூழ்நிலை காரணமாக அதனைப் பெறுவதில் பாதிக்கப்பட பல மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நிரந்தரப்பதிவு தற்காலிக பதிவு என வேறுபடுத்தாமல் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தில் அரசியல் அற்ற பொறிமுறை ஒன்று அவசியம். இன்று தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உணவு மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் செயற்படுத்த வேண்டும் என்று வி.ஜனகன் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
