கல்முனையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகள் திறக்கப்படாது; உணவுப் பொருட்களை விநியோகிக்க விசேட ஏற்பாடு


முதல்வரின் ஊடகப் பிரிவு-
கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (25-03-2020) தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் வேளையில் சன நெரிசலைக் கருத்தில் கொண்டு பொதுச் சந்தைகள் மற்றும் கடைகளை திறக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தப்படுவதுடன் மக்கள் காலடியே சென்று மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பதற்கு நடமாடும் வியாபாரங்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான உயர்மட்ட செயலணியின் இரண்டாவது கூட்டம் இன்று புதன்கிழமை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போதே நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மேற்படி தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்களன்று (23) தற்காலிகமாக 06 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த வேளையில் மக்கள் உணவுப் பொருட்களுக்காக அலைமோதியதையும் இதனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு வாய்ப்பிருப்பதையும் கவனத்தில் கொண்டு, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை பின்பற்றி வர்த்தக சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களிலுள்ள பொதுச் சந்தைகள், நாளை வியாழக்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் நேர வேளையிலும் சன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு திறக்கப்பட மாட்டாது.

இவற்றுக்குப் பதிலாக மரக்கறிகளை மாத்திரம் கல்முனையில் சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திலும் மருதமுனையில் மஷூர் மௌலானா விளையாட்டு மைதானத்திலும் சாய்ந்தமருதில் பொலிவேரியன் மற்றும் பௌஸி விளையாட்டு மைதானங்களிலும் நற்பிட்டிமுனையில் அஷ்ரப் விளையாட்டு மைதானத்திலும் பாண்டிருப்பில் பொது விளையாட்டு மைதானத்திலும் விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவற்றை உடனடியாக ஒழுங்குபடுத்துவதற்கும் நாளை வியாபார நேரத்தில் கண்காணித்து, வழிநடாத்துவதற்கும் மாநகர ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் பொறுப்பளிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை பாமஸிகளைத் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள், கடைகள் எக்காரணம் கொண்டும் திறக்க முடியாது. இதற்குப் பதிலாக அவசியமான உணவுப் பொருட்களை ஓட்டோ உள்ளிட்ட வாகனங்களில் நடமாடும் விற்பனை மூலமாக விற்பதற்கு வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இவ்வர்த்தகர்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் வாகனங்களில் நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே எமது உயர்மட்ட செயலணியின் தீர்மானத்திற்கமைவாக இவ்வர்த்தககர்ளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் பொலிஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

நாளை வியாழக்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்ற வேளையிலும் மக்கள் நடமாட்டமின்றி, ஊரடங்கியிருப்பதன் மூலமே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து எமது மக்களை பாதுக்காக்க முடியும் என்பதை ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புடமையுடன் கவனத்தில் கொண்டு, ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான உயர்மட்ட செயலணி மன்றாட்டமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -