அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எனது நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகினேன் என்ற அடிப்படையில் கடந்த (15.03.2020) ஆம் திகதி முதல் என்னை நான் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளேன் என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று குறித்த காலப்பகுதியில் என்னோடு பயணித்தவர்கள், பழகியவர்கள், என்னை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 15ம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
அந்தவகையில் எங்களுடைய காலப்பகுதி (29.03.2020) ம் திகதி முடிவுற்றது. அதன்படி எங்களுக்கு எவருக்கும் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லை என்பதனை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதன் படி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இருந்து அதற்கான அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த காலகட்டத்தில் எங்களுக்காக கடமையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
