அமெரிக்க வர்த்தகச் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சீனாவின் பொருட்கள் மீது அதிகளவான வரியை விதித்தது மட்டுமில்லாமல் சீனாவிலிலுள்ள நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களையும் கடுமையாக எச்சரித்தது.
இதன் எதிரொலியாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் , ஹூவாவே நிறுவனத்திற்கு வழங்கும் தொழில்நுட்ப சேவைகளை முழுமையாக முடக்கியது. இதில் அதிர்ச்சியடைந்த ஹூவாவே , கூகிள் நிறுவனத்தைப் போன்றே அனைத்து விதமான சேவைகளையும் சொந்தமாகத் தயாரிக்க முடிவு செய்தது.
ஹூவாவே இம் முடிவால் அதிர்ச்சியடைந்து போன கூகுள் தற்போது மனம் மாறி ஹூவாவேக்கு மீண்டும் சேவைகளை அளிக்க அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஹூவாவே போன்ற முக்கியமான வாடிக்கையாளரைக் கைவிட விருப்பம் இல்லாமல் அமெரிக்க அரசாங்கம் சீன நிறுவனங்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க கோரி அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்திடம் கூகுள் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே வர்த்தகத்தின் துணைத் தலைவர் சமீர் சமத் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் விதித்த தடையின் மூலம் கூகுளின் சேவை இல்லாமலே ஹூவாவே தனது Mate 30, Mate 30 Pro ஸ்மார்ட் போனை வெளியிட்டது. மக்கள் மத்தியில் இந்தப் ஸ்மார்ட் போனுக்கு மிகப்பெரியளவில் வரவேற்பு இருந்தாலும் கூகுள் இல்லாமல் வெளியானதால் பாவனையாளர்கள் இதை வாங்கத் தயங்கினார்கள்.
ஆயினும் 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 23 கோடியே 85 லட்சம் போன்களை விற்பனை செய்து 18.52% சந்தையைத் ஹூவாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் போன் தயாரிப்பில் உலகளவில் சக்திவாய்ந்த நிறுவனமாக இருந்துவரும் ஹூவாவேவின் வளர்ச்சியைக் கண்டு வியந்துபோன நிலையில் அமெரிக்கா ஜனாதிபதியின் எச்சரிக்கையை அடுத்து ஹூவாவே நிறுவனத்திற்கு அளிக்கும் சேவை அனைத்தையும் நிறுத்த முடிவு செய்தது கூகுள். இதனால் ஹூவாவே நிறுவனத்தின் போன் விற்பனையிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஹூவாவே மற்றும் இதர ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு தனியொரு இயங்குதளத்தை உருவாக்க முடிவு செய்தது. இவ் விடயம் கூகுள் நிறுவனத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் தற்போது உலகில் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் 50% சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் தான். இவர்களை இழந்துவிட்டால் பெரிய நஷ்டத்தைக் கூகுள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே தற்போது கூகுள் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஹூவாவே நிறுவனத்திற்குச் சேவை அளிக்க அனுமதி கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா ஜனாதிபதி இக்கோரிக்கையை மறுக்கவும் முடியாத நிலையில் உள்ளார்.
கூகுள் நிறுவனத்திற்கு கொடுத்தால் அடுத்து பிற துறை நிறுவனங்களும் தடையை நீக்க கோரிக்கை விடுக்கும். இப்படியிருக்கையில் அமெரிக்கா அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.