குறித்த அறிக்கையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 2020.01.31ம் திகதியிடப்பட்டு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடித்திற்கமைய தரமுயர்த்தப்படவுள்ள நாட்டிலுள்ள நான்கு வைத்திய நிலையங்களின் பட்டியலில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்தின் பிரகாரம், வைத்தியசாலையின் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன், ஆளணிகளும் அதிகரிக்கப்படவுள்ளது.
சாய்ந்தமருது வைத்தியசாலை 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 68 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பழமைவாய்ந்த வைத்தியசாலையாகும். கடற்கரை பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலை சுனாமியால் முற்றாக சேதமடைந்த நிலையில் அரச மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் நிதி உதவியால் பூரண வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டது.
சுமார் முப்பதாயிரம் சனத்தொகை கொண்ட சாய்ந்தமருதுக்கு மாத்திரமன்றி அயல் பிரதேசமான மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மக்களுக்கும் இவ்வைத்தியசாலை தனது சேவைகளை வழங்கி வருகின்றது.
சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகிகள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சாய்ந்தமருது சுயேற்சைக்குழு சார்பான கல்முனை மாநரக சபை உறுப்பினர்கள் அத்துடன் புத்திஜீவிகள் கொண்ட குழுவினர் இணைந்து கிழக்கு மாகாண முன்னாள் ஆளுணர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை சந்தித்து வைத்தியசாலை தரமுயர்த்தலை செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து சாய்ந்தமருது வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலை தரம் A ஆக தரமுயர்த்த தேவையான நடவடிக்கை எடுத்திருந்தமையை தற்போது நினைவுகூற விரும்புகிறோம்.
இச்சந்தர்ப்பத்தில், வைத்தியசாலை தரமுயர்த்தலுக்கான ஆரம்பகட்ட நடடிக்கை எடுத்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுணர் ஹிஸ்புல்லாஹ், இவ்விடயத்தை மிக விரைவுபடுத்தி செயற்படுத்திக் கொண்டிருக்கும் தற்போதைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதரா சேவைகள் பணிப்பாளர் பணிமனை திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி டொக்டர்.எம்.சி.எம்.மாஹிர் உட்பட அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்ளார் ஆகியோருக்கு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் நன்றி கூறுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
