கிராமிய இளைஞர்களுக்கு வேலைத்திறன்களை வழங்கும் தொழில் ஆலோசனை பேரூந்தை அங்குரார்ப்பணம் செய்ய அரச மற்றும் தனியார் துறைகளுடன் அமெரிக்கா இணைவு

மெரிக்காவின் நிதியுதவியுடனான 'தொழில் ஆலோசனை பேரூந்து' (Career Bus) இன்று அதனது முதலாவது பயணத்தை தொடங்கியது. இலங்கை முழுவதும் பயணிப்பதன் மூலம், தொழில் வழிகாட்டல் நிபுணர்களை அணுகுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளைக் கொண்ட கிராமிய இளைஞர்களுக்கு அது தொழில்முறை வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளை எடுத்துவரும். தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினரின் பங்காண்மையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரூந்தானது, தேவேந்திரமுனையில் அதனது பயணத்தை ஆரம்பித்ததுடன், கிழக்கு, தெற்கு, வடக்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் 30 இற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிறுத்தப்படவுள்ளது. அது தமது பயணத்தை 2020 மே மாதம் முதலாம் திகதி பருத்தித்துறையில் நிறைவுசெய்யும்.
'இளம் இலங்கையர்களுக்கு தொழில் தெரிவுகளை விஸ்தரிப்பதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டிணைந்துள்ளன,' என்று யுஎஸ்எயிட் (USAID) இன் பிரதி உதவி நிர்வாகி ஜவியர் பியட்ரா அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவித்தார். 'புதிய வாய்ப்புகள் கிட்டுவதற்கும் தொழில் வாய்ப்பு சந்தையில் போட்டியிடுவதற்கு தேவையான திறன்களை பெறுவதற்கும் நாம் ஒன்றிணைந்து இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு உதவுகிறோம்,' என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பும் (USAID)அதனது இளைஞர் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு திட்டமும் ((YouLead)) இந்த தொழில் ஆலோசனை பேரூந்துக்கு உதவியளிக்கின்றன. அமெரிக்க வர்த்தக சம்மேளனம், Maga Engineering, CareerMe, Pizza Hut, Save the Children என்பனவும் இதற்கு அனுசரணை வழங்குகின்றன.
'இந்த பேரூந்தை யதார்த்தமாக்குவதில் யுஎஸ்எயிட்டின் உதவிக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்,' என்று தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் தமித்த விக்கிரமசிங்க தெரிவித்தார். 'இலங்கை இளைஞர்களுக்கு இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை உணரும் தனியார்துறை அங்கத்தவர்களுடன் தொழில் பயிற்சி அதிகாரசபை இணைந்துள்ளமையை இட்டு நான் பெருமையடைகிறேன்,' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் ஆலோசனை பேரூந்து ஸ்தானமொன்றை வந்தடைந்ததும், பேரூந்தில் ஏறுமாறு இளைஞர், யுவதிகள் அழைக்கப்படுவார்கள். தொழில் பற்றிய நேரடி ஆலோசனைக்கான மேசைகளும் அங்கு அமைக்கப்பட்டிருக்கும். ஒலி-ஒளி காட்சி கூடாரமொன்றில் தொழில் தெரிவுகள் மற்றும் தொழில்முனைவு பற்றிய தகவல்களும் வழங்கப்படும். தொழில் சோதனையொன்றை எடுப்பதற்கும் தத்தமது தொழில் ஆளுமை சுயவிபரத்தின் அச்சுப் பிரதியொன்றை அந்த இடத்திலேயே பெற்றுக் கொள்வதற்கும் இளைஞர், யுவதிகள் பேரூந்தினுள் இலத்திரனியல் டெப்லெட் உபகரணங்களை அணுகக்கூடியதாக இருக்கும். பெறுபேறுகளை விளக்குவதற்கு பயிற்சிப்பெற்ற தொழில் வழிகாட்டல் அதிகாரிகள் அங்கு இருப்பார்கள். காணப்படும் தொழில் வாய்ப்புகள் பற்றி இளைஞர், யுவதிகளுக்கு தெரியப்படுத்தவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவும் சில ஸ்தானங்களில் உள்ளூர் தனியார் நிறுவனத்தினரும் அந்த இடத்திலேயே இருப்பார்கள். இந்த தொழில் ஆலோசனை பேரூந்தானது அதனது முதலாவது பயணத்தை நிறைவு செய்ததன் பின்னர் இலங்கை முழுவதிலுமுள்ள கிராமிய பிரதேசங்களுக்கு அதனது வழக்கமான பயணங்களை தொடர்ந்து மேற்கொள்ளும். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -