ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்புக்குத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்படுகிறபோதும், பாரளுமன்றத் தேர்தலின் பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் சாத்தியம் உள்ளது.
இந் நியமனங்களுக்காக திறைசேரியின் அனுமதி இன்னமும் பெறப்படவில்லை. அந்த அனுமதிக்கான விண்ணப்பமும் இதுவரை அனுப்பப்படவில்லை என தெரியவருகிறது.
நாடு முழுவதுமுள்ள ஒரு லட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு என்ற அறிவிப்போடு தற்போது DS அலுவலகங்கள் ஊடாகவும், கட்சி அலுவலகங்கள் ஊடாகவும் அதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த நியமனங்களைத் தேர்தலுக்கு முன்னர் வழங்கும் சாத்தியம் இல்லை என்றும், இந்தத் தரவுகள் தேர்தலுக்கே பயன்படும் என்றும் கூறப்படுகின்றது.
ஒரு இலட்சம் பேருக்கு நியமனம் வழங்கப்பட்டு அவர்களுக்கு 6 மாதத்துக்கு தலா 22 ஆயிரம் ரூபா வீதம் சம்பளம் வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வேலைவாய்ப்புக்காக மாதமொன்றுக்கு 220 கோடி ரூபா தேவைப்படும். நாடு பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் கடந்த வருடம் நடைபெற்ற அபிவிருத்தி வேலைக்கான கொடுப்பனவே வழங்கப்படாத நிலையே தற்போது காணப்படுகிறது. அதனால் இவ்வாறான பெரும் தொகை நிதியை இப்போதிருக்கும் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியம் இல்லை.