இந்தோனேஷியா ஜாவா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக்கொடுத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் மௌலானாவின் சாதனையைப் பாராட்டி, அமானா வங்கி அவருக்கு 50,000 ரூபா பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
அமானா வங்கியின் தலைமைக் காரியாலய அதிகாரி அர்ஷாட் ஜமால்தீன் தலைமையிலான வங்கி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று கல்லூரிக்கு விஜயம் செய்து, இப்பரிசைக் கையளித்துள்ளது.
இந்நிகழ்வில் அமானா வங்கியின் கல்முனைக் கிளை முகாமையாளர் எச்.எம்.சமீம் மற்றும் உத்தியோகத்தர்களான ஐ.எம்.பாரிஸ், எம்.ஆர்.எம்.பிராஜ் ஆகியோருடன் கல்லூரி முதல்வர் யூ.எல்.எம்.அமீன், பிரதி அதிபர்களான ஜனாபா எஸ்.எஸ்.எம்.மசூத்லெப்பை, அஸ்மி காரியப்பர், ஏ.எச்.நதீரா மற்றும் இனாம் ஷக்காப் மௌலானா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
"இளம்பருவத்தில் சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்து, நாட்டுக்கு பெருமையை பெற்றுத்தந்துள்ள பாத்திமா ஷைரீனை வாழ்த்துவதில் அமானா வங்கி பெருமகிழ்ச்சியடைகிறது. அத்துடன் அவரை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் எம் தேசத்தில் இருந்து இன்னும் நிறைய சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற தூரநோக்கின் அடிப்படையிலுமே இப்பரிசை வழங்கி கௌரவிகின்றோம்" என்று தலைமைக் காரியாலய உத்தியோகத்தர் அர்ஷாட் ஜமால்தீன் இதன்போது தெரிவித்தார்.