களுத்துறை நிக்கஹா, பிரதேசத்தில் காணப்படும் மண்சரிவு அபாயத்தை மேலும் வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதற்காக இலங்கையின் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மண்சரிவு கண்காணிப்புக் கருவிகளை ஐக்கிய அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வைச் சேர்ந்த (USGA) பொறியியலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, இலங்கை விஞ்ஞானிகளுடன் பங்காண்மையுடன் இந்த உபகரணங்களை நிறுவுவது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இதனால் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு மண்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளை உடனடியாக அடையாளம் கண்டு மண்சரிவு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் மற்றும் சொத்து சேதங்களைத் தடுக்க முடிந்துள்ளது. 'சிறப்பான தயார்படுத்தல் உயிர்களை பாதுகாக்கும்,' என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார். 'இந்த உபகரணங்களை பயன்படுத்தி கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மண்சரிவு ஏற்படக் கூடிய பிராந்திய இடங்களை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை வெளியிட முடியும். இது கிராம மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும்,' என்றார்.
பருவகால மழைவீழ்ச்சி, சனத்தொகை அதிகரிப்பு மற்றும் மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டுமானங்கள் காரணமாக இலங்கையில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. நான்கு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இந்த உபகரணங்களைப் பயன்படுத்தி கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் நிலமட்ட நீர் மற்றும் மழைவீழ்ச்சி என்பவற்றைக் கண்காணித்து மண்சரிவு அபாயத்தை முற்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் குழுவினர் மண்சரிவு ஏற்படும் இடங்களை அடையாளம் காணுதல், இடவியல் தரவுகளை பயன்படுத்துவது, அனர்த்த பதிலிறுப்பு நேரங்களில் விஞ்ஞானிகளின் பங்களிப்பு ஆகியவை தொடர்பில் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளர்களுக்கு செயலமர்வுகளையும் நடத்தியிருந்தனர். ஒளி கண்டறிதல் மற்றும் வரம்புமுறையை (LiDAR) பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துவது, நிலத்தின் மேற்பகுதியில் நிலைமைகளை அளவிடுதல் போன்ற விடயங்கள் பற்றியும் பங்குபற்றியவர்கள் தெரிந்துகொண்டனர். களத்திலிருந்து மண்சரிவு பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கான தொழில்நுட்பம், டப்லெட் கணனிகளைப் பயன்படுத்தி களத்திலிருந்து தகவல்களை சேகரித்தல் போன்றவை குறித்தும் செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
உபகரணங்கள், நிறுவதல் மற்றும் ஆய்வுக்கான பரிமாற்றங்கள் என்பவற்றுக்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் (USAID) வெளிநாட்டு அனர்த்த உதவி அலுவலகத்தின் (OFDA) ஊடாக உதவி வழங்கப்படுகிறது. 2018 ஆண்டு முதல் USGA மற்றும் USAID/OFDA என்பன மண்சரிவு அபாயங்களைக் குறைத்து உயிர்களைப் பாதுகாக்க கட்டட ஆரய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -