கல்முனையில் வெள்ளப்பெருக்கு; மாநகர சபை துரித நடவடிக்கை; முதல்வரும் களத்தில்

அஸ்லம் எஸ்.மௌலானா-
டந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு, சுகாதார மற்றும் வேலைப் பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் இதற்காக முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையை கருத்தில் கொண்டு, அப்பகுதிகளில் காணப்படுகின்ற முகத்துவாரங்கள் திறப்பட்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் தோணாக்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகான்களில் காணப்படுகின்ற தடைகளை முற்றாக அகற்றி, அவற்றை தோண்டி ஆழப்படுத்தும் நடவடிக்கைகளும் இரவு, பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை வீடு, வளவுகளில் இருந்து வெளியேற முடியாதிருக்கின்ற வெள்ளம், மாநகர சபையின் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றது. வீதிகள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் சாய்ந்து வீழ்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய பருவ மழை காலநிலையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் இயற்கை அனர்த்த அபாய பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு கடந்த 25ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர சபையில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமையும் இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு, சுகாதார மற்றும் வேலைப் பிரிவுகளில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதுடன் மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறைகள் யாவும் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -