19வது அரசியலமைப்புத்திருத்தம் உடனடியாக நீக்கப்படவேண்டும்-ஜனாதிபதி

19வது அரசியலமைப்புத்திருத்தம் அரச நிர்வாகத்திற்கு பாரிய தடையாகக் காணப்படுகின்றது. இதனை நீக்குவதற்கான பலமான நாடாளுமன்றத்தின் தேவைப்படுகிறது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையேயான சந்திப்பு நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது பேசிய அவர்,

“மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளை உரியவாறு நிறைவேற்றுவதே எனக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்கள் கையளித்துள்ள சவால்மிக்க பொறுப்பாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

கழிவுகளை வெளியேற்றுதல் முதல் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் வரை நாம் செயற்படும் விதத்தினை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் மக்கள் சிரமங்களை சந்திக்கக்கூடாது.

வினைத்திறனான மக்கள்நேய அரச சேவையை உறுதிப்படுத்த வேண்டியது அனைத்து அரச சேவையாளர்களினதும் கடமையாகும். அரச சேவையானது ஊழல், மோசடியற்றதாகக் காணப்பட வேண்டும்.

நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்று, பொருளாதாரம் பலமாக கட்டியெழுப்பப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைந்தது. மக்கள் அப்போதைய அரசாங்கத்தை நிராகரித்தமைக்கான காரணங்களை புரிந்து செயற்பட வேண்டும். இல்லையேல் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

வீழ்ச்சியடைந்துள்ள தொழில்முயற்சிகளை ஊக்கப்படுத்தி, முதலீட்டாளர்களை பாதுகாத்து, இழந்த தொழில்வாய்ப்புக்களை மக்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனூடாகவே பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். நாட்டை உரிய பாதையில் கொண்டு செல்லும் செயற்பாட்டில் புத்திஜீவிகளினதும் நிபுணர்களினதும் பங்களிப்பு பாரிய பக்கபலமாக அமையும்.

ஏற்றுமதி விவசாய பயிர்களுடன் தொடர்பான நன்மைகளை தற்போது விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ளனர். அதேபோன்று வரிச்சலுகை உள்ளிட்ட உபாய மார்க்கங்களின் நன்மைகளை ஒட்டுமொத்த மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

19வது அரசியலமைப்புத்திருத்தம் அரச நிர்வாகத்திற்கு பாரிய தடையாகக் காணப்படுகின்றது. இதனை நீக்குவதற்கான பலமான நாடாளுமன்றத்தின் தேவைப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான முதன்மை காரணி அதுவாகும்” என்றார்.

இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -