ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாரு பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகளால் தங்களது விவசாய பயிர்ச் செய்கை நிலங்கள் விவசாய உற்பத்திகளான வாழை தென்னை நெற் செய்கை இடங்களை குடியிருப்பு காணிக்குள் புகுந்து துவம்சம் செய்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாலம்போட்டாரு பகுதியில் உள்ள இக்பால் நகர், பத்தினி புரம்,முத்துநகர் உள்ளிட்ட கிராம மக்கள் இதனால் இரவிலும் பகலிலும் நிம்மதியாக தூங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
யானை வேலிகளை தாண்டியும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலாளர் ,வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச மட்ட உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இக்காட்டு யானையினால் பெரும் அச்சத்துடன் வாழ வேண்டிய இக்கட்டான சூழ் நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இக் கிராமத்தில் அன்றாடம் உழைத்து வாழக்கூடிய விவசாயிகளே வசித்து வருகிறார்கள்.
தங்களது வயல் நிலங்களை பாதுகாப்பதற்காக தினமும் மாலை நேரங்களில் யானை வேலி அற்ற பகுதியில் தங்குஸ் போன்ற கையிரை கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது .
மேலும் குறித்த கிராமத்தின் அருகாமையில் உள்ள திருகோணமலை கண்டி பிரதான வீதிக்கு அருகில் சிங்க கந்த பகுதியில் தம்பலகாம பிரதேச சபையினால் கொட்டப்படும் கழிவுகளின் மூலமாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனை அண்டிய பகுதியிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே காட்டு யானைகளிடமிருந்து தங்களின் கிராம மக்களின் உயிரை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றார்கள்..
