முஸ்லிம் அரசியல் தலைமைகள் முடிந்தால் பாராளுமன்றில் எதிர் தரப்பில் அமர்ந்து அரசியல் செய்து காட்டல் வேண்டும்


முன்னாள் அமைச்சர் ஹசன் அலி சவால்
முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று தம்பட்டம் அடித்து கொள்கின்ற தரப்பினர் முடிந்தால் பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து அரசியல் செய்து காட்ட வேண்டும், அதுவே முஸ்லிம் மக்களின் பெருவிருப்பமாக உள்ளது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
இவரின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று செவ்வாய் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
முஸ்லிம் சமூகத்தின் பெருந்தலைவர் அஷ்ரப் பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து இருந்துதான் முதன்முதல் அரசியல் செய்தார். எதிர்ப்பு அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவரின் அக்கால பகுதி அமைந்து நின்றது. அக்கால பகுதியில் அவர் 118 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். அமைச்சராக அவர் பதவி வகித்த காலங்களில் மொத்தமாக 05 மணித்தியாலங்கள் வரைதான் பாராளுமன்றத்தில் பேசினார் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. அவர் பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து இருந்து அரசியல் செய்த காலத்தில் பெற்று கொடுத்த நன்மைகள் என்றென்றைக்குமே மகத்தானவை. அவற்றில் குறிப்பிட்டு சொல்ல தக்க ஒன்றுதான் விகிதாசார தேர்தலில் வெட்டு புள்ளியாக இருந்து வந்த 121/2 வீதத்தை 05 சதவீதமாக குறைத்தார். அதன் நன்மைகளைதான் ஜே. வி. பி அடங்கலாக சிறுபான்மை கட்சிகள் இன்றும் அனுபவிக்க முடிகின்றது.
அரசாங்கத்தில் அதிகாரம் மிக்க அமைச்சு பதவிகளை வகித்த எமது பெருந்தலைவருக்கு அரசாங்க தரப்பில் இருந்து அரசியல் செய்வது இறுதி காலத்தில் அலுத்து போய் விட்டது. கட்சி போராளிகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் தூர விலகி அன்னியப்பட்டு இருப்பதை உணர்ந்தார். அதனால் இனி மேல் எதிர் தரப்பில் இருந்துதான்அரசியல் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். ஆயினும் அதற்கு பின்பாக அவர் எதிர்பார்த்து இராத வகையில் மரணிக்க நேர்ந்தது. அவருடன் அந்த இறுதி ஆசையும் நிறைவேறாமலேயே போய் விட்டது. கடந்த 19 வருடங்களாக அமைச்சுகளை பெற்று அரசியல் செய்பவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று தரவே முடியவில்லை. அமைச்சு பதவிகளை பெறுகின்ற இவர்கள் பாராளுமன்றத்தில் பேசாமடந்தைகளாகவே நடக்கின்றனர். லீடர்களாக அன்றி டீலர்களாக செயற்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு அமைச்சு பதவிகளை கொடுத்தால் இவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று ஆட்சியாளர்கள் கண்டு கொண்டார்கள்.
இவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களை அச்சப்படுத்தியே அன்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். அதற்காக வெள்ளை வான் கடத்தல், கிறிஸ் பூதம், வன்செயல் ஆகியவற்றை சொல்லி சொல்லி கோதாபய ராஜபக்ஸவை அரக்கனாக காண்பித்தார்கள். எனவே கூடுதலாக முஸ்லிம் பெண்கள் ரொம்பவே அச்சப்பட்டு அன்னத்துக்கு வாக்களிக்க நேர்ந்தது. ஆனால் எந்த அரசாங்கத்தை இவர்கள் குற்றம் சாட்டினார்களோ அந்த அரசாங்கத்தில்தான் இவர்களும் அப்போது அமைச்சர்களாக இருந்தனர். ஆகவே இவர்கள் சொல்லி காட்டிய சம்பவங்கள் மீது இவர்களுக்கும் நிச்சயம் பங்கு, பொறுப்பு ஆகியன இருக்கவே செய்கின்றன. இவர்கள் அவற்றில் இருந்து தப்பிக்க முடியாது. இவர்கள் அமைச்சு பதவிகளை அப்போது தூக்கி எறிந்து இருந்தால் வேறு விடயம். இவற்றை சொல்வதற்கான அருக்தை நிச்சயம் எனக்கு இருக்கின்றது. ஏனென்றால் நான் பாராளுமன்றத்தில் எப்போதும் ஒரு போராளியாகவே, புரட்சியாளனாகவே செயற்பட்டு வந்திருக்கின்றேன். அதை ராஜபக்ஸ சகோதரர்களும் மிக நன்றாகவே அறிவார்கள்.
நான் அவ்விதம் செயற்பட்டு வந்த காரணத்தாலேயே முஸ்லிம் காங்கிரஸில் இருந்து மனம் உடைந்து நானாகவே வெளியேறி செல்வதற்கான சதிகள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் அவரால் அமைச்சு பதவி இல்லாமல் இருக்கவே முடியாது. அதற்கான திராணி அவருக்கு கிடையவே கிடையாது. அமைச்சு பதவி இல்லாமல் அவரால் கட்சி நடத்தவும் முடியாது. அவர் அமைச்சு பதவிகளை எடுக்காமல் எதிரணியில் அமர்ந்து அரசியல் செய்தால் அவர் நம்பி இருக்கின்ற நபர்கள் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழன்று விழுவதை போல அவரை விட்டு நழுவி விலகி போய் விடுவார்கள். அது அவருக்கும் நன்றாகவே தெரியும். கோதாபய ராஜபக்ஸவை வாய் கிழிய பேசி வாக்குகளை சேகரித்த அவர்கள் அந்த வாய் புண்கள் ஆறுவதற்கு முன்பாகவே அமைச்சு பதவிகளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்பதுகூட எந்த வகையிலும் ஆச்சரியத்துக்கு உட்பட்ட விடயமாக நிச்சயம் இருக்க போவதே இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -