நாட்டில் தேவையற்ற குழப்பங்களோ, அரசியல் பழிவாங்கல்களோ, ஆட்கடத்தல்களோ இடம்பெறலாம் என எவரும் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ள அவர், அமைதியை குழப்புவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமாக (21) பதவியேற்றுக்கொண்ட அவர், விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் அரசியல் பழிவாங்கல்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் தேவையற்ற குழப்பங்கள் இடம்பெறலாம் என நாட்டு மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. எதிர்வரும் நாட்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஏனைய நாட்களை விட அதிக கவனம் செலுத்தப்படும்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறும், ஒவ்வொரு பிரதேசங்களினதும் பாதுகாப்பிற்கு அந்தந்த பிரதேச சிரேஷ்ட பொலிஸ் உயரதிகாரிகள் பொறுப்பாகச் செயற்பட வேண்டும் என்றும், பொலிஸ் மா அதிபர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் குறிக்கோளுக்கு அமைய இன, மத மற்றும் கட்சி பேதமின்றி சகலரும் அமைதியாக வாழக்கூடிய சூழலைப் பேணுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற அச்சம் கொள்ளாது சுமுகமாக அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். யாராவது அல்லது எக் குழுக்களாவது அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறும், பாதுகாப்புத் தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
